லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் வெளியிட்ட “ஹவுஸ் ஓனர்” பர்ஸ்ட் லுக்..!

யதார்த்தமான உணர்வுகள், உண்மையான கதைகளாக உருவாகின்றன. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அழகான கதைகளை உருவாக்குவதோடு, அதை உயர்ந்த தரத்தில் சினிமாவாக வழங்குபவர். அக்டோபர் மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அம்மணி’ படத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தனது அடுத்த படமான  ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிகுந்த உற்சாகத்தோடு வெளியிட இருக்கிறார். சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது.
மிகுந்த மகிழ்ச்சியோடு பேசும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறும்போது, “2018 தமிழ் சினிமாவுக்கு உண்மையாகவே ஒரு மிகச்சிறந்த வருடம். 96, ராட்சசன், பரியேறும் பெருமாள், வட சென்னை என நல்ல படங்கள் 2018ஐ அலங்கரித்திருக்கிறது. இந்த நல்ல நேரத்தில் சென்னை வெள்ளத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும்  என்னுடைய ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை உங்களுக்கு காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. என் எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் நிஜ வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்டவை தான், ‘ஹவுஸ் ஓனர்’ கூட விதிவிலக்கு அல்ல.
பல்வேறு பிரபலங்கள் எங்கள் படத்தின் போஸ்டரை பகிர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகின் மிக முக்கியமான இயக்குனர்களான சமுத்திரகனி மற்றும் பண்டிராஜ் எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதற்கு நன்றி. அக்டோபர் எனக்கு மிகவும் சிறப்பான மாதமாகவே இருந்திருக்கிறது.  இந்த சீசனில் வெளியாகி வரும் தரமான திரைப்படங்களின் லிஸ்டில் எங்கள் படமும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.
படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கூறும்போது, “இத்திரைப்படத்தில் ஆடுகளம் புகழ் கிஷோர் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். பசங்க படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற , கோலி சோடாவில் பாராட்டுக்களை குவித்த கிஷோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீரஞ்சனி ஒவ்வொரு வீட்டிலிருக்கும் அம்மாவை  பிரதிபலிக்கும் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்றார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள் கிடைத்தது என் பாக்கியம். வாகை சூட வா தொடங்கி சமீபத்திய ராட்சசன் வரை அவரின் இசைக்கு நான் ரசிகை. மகளிர் மட்டும் புகழ் பிரேம் எடிட்டிங்கை கையாள்கிறார். கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்ய, தபஸ் நாயக் ஒலிப்பதிவை கவனிக்கிறார்.

Leave a Response