நெருக்கடியில் முதல்வர் – ராஜினாமா செய்வாரா எடப்பாடி..?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலை துறை ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிவிட்டதால், பழனிச்சாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

நெடுஞ்சாலையில் துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சம்பந்தி மற்றும் உறவினர்களுக்கு டெண்டர்களை கொடுத்து முறைகேடு செய்ததாகவும் திமுக தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் மீது திருப்தி இல்லை என்று கூறிய நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ -யிடம் ஒப்படைக்க வேண்டும் என இன்று உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் மாநில செயலாலர் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வர் பொறுப்பில் உள்ள காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என உயர் நீதிமன்றமே கூறியுள்ளதால், முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக் உரிமையை பழனிச்சாமி இழந்துவிட்டார் எனவும், பதவியிலிருந்து விலகி சிபிஐ விசாரணையை அவர் எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Response