பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது – தம்பிதுரை..!

பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை கரூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தம்பிதுரை ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றார். மேலும் அவர் பேசியதாவது, பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் தேவைதான், அதற்காக அதை தவறாக பயன்படுத்த கூடாது. பத்திரிகை சுதந்திரம் தமிழகத்தில் முன்மாதிரியாக இருக்கிறது என்றார்.

இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் எம்பி தம்பிதுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றது.

அதேபோல் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும் என்றார். அப்போது நீங்கள் தனித்து போட்டி என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தம்பிதுரை, நான் என்றால் தம்பிதுரை இல்லை. அதிமுகவைதான் அப்படி அவர் சொல்லியுள்ளார்.

இதை சொன்னதற்கு அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நன்றி. கடந்த தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணனோ அவரது கட்சியோ ஆதரித்து வெற்றி பெறவில்லை. தனித்து நின்று தான் வெற்றி பெற்றோம். இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்

Leave a Response