“ராட்சசன்” விமர்சனம்..!

பள்ளி மாணவிகளை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவை தேடிப்பிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதையே ராட்சசன் திரைப்படம்.

சினிமா இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கும் நாயகன் அருண் (விஷ்ணு விஷால்), குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக போலீஸ் பணியில் சேர்கிறார். அப்போது ஒரு ராட்சசன், பள்ளி மாணவிகளை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறார். தனது சினிமா கதைக்காக அருண் சேகரித்து வைத்த தகவல்களின் அடிப்படையில் சைக்கோ கொலைக்காரனை தேட ஆரம்பிக்கிறார். அந்த ராட்சசன் யார்? எதற்காக இந்த கொலைகளை செய்கிறான்? அருண் அவரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படம்.

பொதுவாக சைக்கோ திரில்லர் படங்களுக்கு என ஒரு டெம்ப்ளேட் இருக்கும். இந்த ராட்சசனும் அதே டெம்ப்ளேட்டில் தான் நகர்கிறான். ஆனால் அதை காட்சிப்படுத்தி இருக்கும் விதத்தில் வித்தியாசப்படுகிறார் இயக்குனர் ராம்குமார். முண்டாசுப்பட்டி எடுத்த இயக்குனரா இந்த படத்தை எடுத்தார் என வியக்க வைத்திருக்கிறார்.

முதல் பாதி முழுவதுமே படம் செம திரில்லிங்காக நகர்கிறது. ராட்சசனின் கொலைகள் நம்மை நடுங்க செய்கிறது. யார் இந்த ராட்சசன் என எளிதில் யூகித்துவிட முடியாத அளவுக்கு மிக அற்புதமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார். இப்படத்திற்காக அவர் செய்துள்ள ஆய்வுகள் படம் பார்க்கும் போது தெரிகிறது.

அதேபோல் ராம்குமாரை மற்றொரு காரணத்துக்காகவும் பாராட்ட வேண்டும். இவ்வளவு கொடூரக் கொலைகள் நிறைந்த இந்த படத்தில், வன்முறை காட்சிகளை நேரடியாக காட்டாமல், இசையின் வழியே அந்த உணர்வை நம்முள் கடத்துகிறார். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக ராட்சசனின் மேக்கிங் இருக்கிறது.

இரண்டாம் பாதியின் பெரும்பகுதி வரை ராட்சசனை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுவது அயர்வை ஏற்படுத்தி விடுகிறது. ராட்சனை திரையில் காட்டிய பிறகும், படத்தை நீட்டிக்கொண்டே போவது, தேவையில்லாதது.

படத்தின் ஆரம்ப காட்சிகளில், கையில் த்ரில்லர் கதையுடன் வாய்ப்பு கேட்டு அழையும் விஷ்ணு விஷாலை தயாரிப்பாளர்கள் பலர் நிராகரிப்பார்கள். ராட்சசன் கதையை பலர் நிராகரித்ததாக ராம்குமார் சொல்லியிருந்தார். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் இயக்குனரின் புத்திசாலித்தனம் புரியும்.

ஜிப்ரானின் பின்னணி இசை நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறது. கொலைக்காட்சிகளுக்கு அவர் அமைத்திருக்கும் இசை, மனதை பதைபதைக்கச் செய்கிறது. ‘காதல் கடல் தானா’ பாடல் ஹைக்கூ. மற்ற பாடல்களும் காதுக்கு இனிமை. ராட்சசனின் தீம் மியூசிக் செம திரில்லிங். விஷ்ணு விஷாலுக்கு இது மிகவும் முக்கியமான படம். இயக்குனரை போலவே முண்டாசுப்பட்டிக்கும், ராட்சனனுக்கும் சூப்பர் வெரைட்டி காட்டி இருக்கிறார்.

அமலாபாலுக்கு பெரிய வேலையில்லை என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு காட்டன் சாரியில் ஸ்கூல் டீச்சராக வந்திருப்பது கண்களுக்கு குளிர்ச்சி. கிளாமரைவிட இது தான் உங்களுக்கு செட்டாகிறது அமலா.

அந்த ராட்சனன் யாருப்பா… எங்களுக்கே பார்க்கனும் போல இருக்கு என நினைக்கும் அளவுக்கு மிரட்டியிருக்கிறார் அந்த நடிகர். படம் வெளியாகும் நிலையிலும் சன்பென்ஸாகவே வைத்திருக்கிறார்கள்.படத்தின் இரண்டு சர்ப்ரைஸ் நடிகர்கள் முனிஸ்காந்த் ராமதாசும், மைனா சூசனும். இருவருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள்.

பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றிருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டுக்கும் மிகவும் உழைத்திருக்கிறார். எடிட்டர் சான் லோகேஷ் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறார்.

த்ரில்லர் விரும்பிகள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இந்த ராட்சசன்.

Leave a Response