ஸ்டாலினுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு : நலம் விசாரிக்க வந்ததாக தகவல்..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து பேசினார். அவர் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்ததாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் டெல்லியிருந்து சென்னை திரும்பிய திருநாவுக்கரசர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தேர்தலில் தன் கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவாக சொல்லி இருந்தார்.

அப்போது பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று ஸ்டாலின் தெளிவாக சொல்லி இருக்கிறார் என்றும், எனவே திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட 8 கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் கூறினார். மேலும் வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவும் காங்கிரஸ் கட்சி தயாராகவே இருப்பதாகவும், அதற்காக விரைவில் ஸ்டாலினை சந்தித்து பேச இருப்பதாகவும் உறுதிபட கூறியிருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உள்ள ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதற்கான துவக்க முடிவு செய்யப்படும் என்றும் முன்னதாக கூறப்பட்டது.

சந்திப்பு முடிந்ததும் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சமீபத்தில் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். அதுகுறித்து நலம் விசாரிக்க வந்தேன். இதுதவிர்த்து பொதுவான அரசியல் நிலவரம் குறித்து பேசினோம். 18 எம்எல்ஏக்கள் குறித்த தீர்ப்பு உள்ளிட்டவை குறித்துப் பேசினோம்.

தொகுதிப் பங்கீடு குறித்து பேச வேண்டிய அவசியம் இப்போது இல்லை. அதற்கெல்லாம் டைம் இருக்கிறது. அப்போதுதான் பேசுவோம். நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்புள்ளது. எதிர்பார்க்கலாம்” என்றார் அவர்.

 

Leave a Response