பரியேறும் பெருமாள் – விமர்சனம்

காலங்காலமாக தென் மாவட்டங்களில் நடக்கும் சாதியக் கொடுமைகளை எந்தவித பாசாங்கமும் இல்லாமல் பார்ப்பவர்கள் நெஞ்சத்தை இஞ்ச் பை இஞ்ச் உலுக்கியெடுக்கிற நேர்த்தியான படைப்பாக வந்திருக்கும் படம் தான் ‘பரியேறும் பெருமாள்’.

திருநெல்வேலியில் உள்ள சட்டக்கல்லூரியில் படிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாயகன் கதிரும், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த நாயகி ஆனந்தியும் நட்பாகப் பழகுகிறார்கள்.

எந்தவித மேற்பூச்சும் இல்லாமல் இயல்பாகச் செல்கிற அவர்களது நட்பில் பாறாங்கல்லாய் வந்து விழுகிறது உயர்சாதிக் ‘கொழுப்பு’.

இருவருடையை நட்பையும் காதல் என்று தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளும் ஆனந்தியின் அப்பா மாரிமுத்துவும், அவரது சுற்றமும் நட்பும் கிடைக்கிற ஒரு சந்தர்ப்பத்தில் நாயகன் கதிரை அடித்துத் துவைத்து, சிறுநீர் அடித்து கேவலப்படுத்தி அனுப்புகிறார்கள்.

உடலும், மனமும் ஒருசேர ரணமாக, ஆனந்தி உடனான நட்புக்கு இடைவெளி விடுகிறார் கதிர். ஆனால் ஆனந்தி விடுவதாக இல்லை. தன் வீட்டுப் பெண்ணை கண்டிக்க முடியாத மாரிமுத்தும், அவரது சொந்தமும் கதிரை ஆள் வைத்து கொலை செய்ய முடிவு செய்கிறார்கள்.

இந்த ஆதிக்க ஆணவத்தின் நெருக்கடியிலிருந்து கதிர் எப்படி தப்பிக்கிறார்? ஆனந்தியிடமிருந்து விலகியிருந்த நட்பு என்னவானது? என்பதே மீதிக்கதை.

நாயகன் பரியேறும் பெருமாளாக கதிர். கருப்பி என்கிற நாயை தேடிக்கொண்டு செல்வதில் துவங்குகிறது அவரது பயணம். வெறும் பனியனுடன் உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, அந்த ஓடை மரங்கள் நிரம்பிய பெரிய பரப்புக்குள்ளும், ரயில் தண்டவாளத்துக் குள்ளும் வெற்றுக் கால்களுடன் ஓடுவதும், கல்லூரியில் தனக்கு ஏற்படுகிற உச்சக்கட்ட அவமானங்களை மனசுக்குள் போட்டு புழுங்கிக் கொள்வதும் என ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் வலியை கேரக்டரில் ஒன்றிப்போய் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கொஞ்சம் தடம் மாறினாலும் ‘வேறு மாதிரி’ சர்ச்சையை உண்டாக்கி விடக்கூடிய கதையில் கதிரின் கல்லூரி நண்பராக வரும் யோகி பாபு வருகிற காட்சிகள் எல்லாமே இறுக்கமான முகங்களை கொஞ்சம் ‘ரிலாக்ஸ்’ ஆக வைக்கின்றன. சுயசாதிப் பெருமைகளைப் பேசித்திரியும் இக்கால இளைஞர்களுக்கு அவர் பேசும் வசனம் பெரும் சவுக்கடி!

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதே அறியாத ஒரு வெள்ளந்திப் பெண்ணாக ஜோ என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் நாயகி ஆனந்தி. இப்படி சாதிய வன்மத்தை ஊட்டாமலேயே உயர்சாதி வர்க்கம் தங்கள் வீட்டுப் பெண்களை வளர்க்கிறார்களா? என்பதை அவருடைய கேரக்டர் கேள்விக்குள்ளாக்குகிறது. இருந்தாலும் சாதி என்பதையும் தாண்டியும் சக வகுப்புத் தோழனிடம் நல்ல நட்பு, அது மெல்ல மெல்ல காதலாக மாறும் தருணங்களில் அவர் திரையில் காட்டும் உணர்ச்சிகள் ஜில்லிட வைக்கின்றன.

திருநெல்வேலியைச் சேர்ந்த நிஜ தெருக்கூத்து கலைஞரான தங்கராஜ் கதிரின் அப்பாவாக வருகிறார். இரண்டாவது தடவையாக கல்லூரிக்கு உன் அப்பாவை கூட்டி வா என்று பிரின்சிபல் சொல்லவும் நிஜமான அப்பாவை அழைத்து வருகிறார் கதிர். இவரா அவருடைய அப்பா? என்பதில் ஆரம்பிக்கிற அதிர்ச்சி, கல்லூரியில் அவருக்கு நடக்கும் கொடுமையைக் கண்டு உடல் நடுங்கிப் போகிறது.

ஆதிக்க சாதியில் பணம் படைத்தவர்கள் மட்டுமல்ல, ஒன்றுமில்லாதவர்கள் கூட சாதி திமிரைக் காட்டத் தயங்குவதில்லை என்பதை தோலுரித்துக் காட்டும் கேரக்டரில் வருகிறார் ‘கராத்தே’ வெங்கடேஷ்.

படிப்பு மட்டுமே நமக்கான மரியாதையையும், விடுதலையையும் பொது சமூகத்தின் மத்தியில் பெற்றுத் தரும் என்று ‘பூ’ ராம் வருகிற காட்சிகள் ஊடாக தான் சார்ந்த சமூக மக்களுக்கு பாடமாக உரக்கச் சொல்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

சாதித் திமிரில் அவமானப்படுத்துவதையே வேலையாகய் செய்யும் லிஜீஸ், உங்க தேவதைகள் லிஸ்ட்டில் நானெல்லாம் கிடையாதா என்று கேட்கும் கல்லூரி பெண் பேராசியர், அப்பாவாக கல்லூரியில் நடிக்கும் சண்முகராஜா, பெற்ற மகளுக்கும், தன் சமுதாய மக்களுக்கு இடையிலும் மாட்டிக் கொண்டு தவிக்கும் மாரிமுத்து என படத்தில் முகம் காட்டுகிற அத்தனை கதாபாத்திரங்களும் கனகச்சிதம்.

புளியங்குளம், கருங்குளம், செய்துங்கநல்லூர் என திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் மண்ணின் இயல்பை அதன் நிறம் மாறாமல் சூடு பறக்க படமாக்கித் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒன்றிப்போய் நம்மை கடத்திச் செல்வதில் மனதை உருக்கும் பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ‘எங்கும் புகழ் துவங்க’, ‘கருப்பி’, ‘நான் யார்’ பாடல்கள் கேட்போர் செவிகளை ‘வலி’யாக்கிச் செல்கின்றன.

‘கருப்பி’யாக வரும் நாய் தான் என் சமூகம், அதற்கு இழைக்கப்படும் அத்தனை கொடுமைகளையும் என் சமூகம் சந்திக்கிறது என்கிற உண்மையை மிகவும் நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

மனிதர்களை மனிதர்களாகப் பாருங்கள், ஆதிக்க சமூகத்தின் பார்வை மாறாத வரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை என்று இரண்டு டீ கிளாசை மேஜை மீது வைத்து சாதி முரணை மிக அற்புதமாக காட்சிப்படுத்தி நிறைவடைகிறது படம்.

சாதி, மதம் கடந்து சக மனிதர்களை நேசிப்போம் என்ற வலிமையான கருத்தை  முன் வைக்கிறது இந்த ‘பரியேறும் பெருமாள்’!

Leave a Response