கருணாஸ் சாதி குறித்து பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்- அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி..!

கருணாஸ் சாதி குறித்து பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

முக்குலத்தோர் படைத் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேசிய பேச்சு இன்றும் ஹாட் டாப்பிக்காக உள்ளது. முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினார் கருணாஸ். மேலும் சாதி ரீதியாகவும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியிருந்தார்.

இதுதொடர்பாக அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கருணாஸை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வன்முறையை தூண்டும் விதமாக கருணாஸ் பேசியதை ஏற்க முடியாது என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, என்னை அரிச்சந்திரன் என கூறிய கருணாஸுக்கு நன்றி. சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனால் லொடுக்கு பாண்டி கருணாஸ் சாதியரீதியாக பேசியதற்கு திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? அதிமுக அரசு மீது குற்றம்சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஸ்டாலின். திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது. திமுகவினருக்கு பஞ்சாயத்து செய்வதிலே மு.க. ஸ்டாலின் நேரம் முடிந்துவிடும்.

ஸ்டாலின் எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திப்போம். ஊழல் குறித்து பேச திமுக, காங்கிரசுக்கு தகுதி இல்லை. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. ஸ்டாலின் அதனை கண்டிக்காதது ஏன்?

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Response