மாணவி சோபியாவை கைது செய்ய காட்டிய வேகத்தை எச் ராஜாவை கைது செய்ய போலீஸார் காட்ட மாட்டார்கள்-டிடிவி தினகரன்..!

மாணவி சோபியாவை கைது செய்ய காட்டிய வேகத்தை எச்.ராஜாவை கைது செய்ய போலீஸார் காட்ட மாட்டார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பெங்களூருவில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சசிகலா சிறையில் நலமுடன் உள்ளார்.

வதந்திகளை நம்ப வேண்டாம். அவர் கன்னடம் கற்றுக் கொள்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு ஓராண்டு ஆகிறது. இந்நிலையில் 3-ஆவது நீதிபதி நல்ல தீர்ப்பை வழங்குவார்.

நீதிமன்றங்கள் தொடர்பாகவே கேள்வி கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்ல முடியும். எச் ராஜாவை எப்படி போலீஸார் கைது செய்வர். அவரை கைதே செய்ய மாட்டார்கள். அமைச்சர் உதயகுமார் ஏதோ காமெடியா பேசுனதை எல்லாம் கேள்வியாக கேட்டு உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்காதீர். இதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர்.

சுவாசிக்க சுத்தமான காற்று வேண்டும், குடிக்க சுத்தமான தண்ணீர் வேண்டும் என கேட்டு போராடிய மக்களை ஏதோ குருவியை சுடுவது போல் இந்த காவல் துறை சுட்டுவிட்டது. இதில் 13 பேர் பலியாகிவிட்டனர்.

சோபியாவை கைது செய்ய காட்டுற வேகத்தை நீதிமன்றத்தை அவமதித்து பேசிய எச் ராஜா மீது போலீஸார் காட்டாதது ஏன். தற்போது மாநிலத்தில் அடிமை அரசாங்கம் நடைபெறுகிறது. அதனால் நிச்சயம் ராஜாவை கைது செய்யமாட்டார்கள்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை பெரிய ஆளாக்காதீர். அவர் பதவியில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எச் ராஜா பேசியதில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தேவையில்லாத முயற்சி. அது தேவையில்லாத கொந்தளிப்பை தமிழகத்தில் உருவாக்கும்.

வாழ்வாதாரத்துக்காக மட்டுமே ஸ்டெர்லைட்டை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் போராடினர். எனவே இவர்கள் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் என கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 8 வழிச்சாலை திட்டத்துக்கு செலவிடும் பணத்தை ஏற்கெனவே உள்ள சாலைகளை அகலப்படுத்துவதற்கும் மழை நீரை சேமித்து வைப்பது போன்றவற்றுக்கு செய்யலாம். இன்னும் 6 மாதத்துக்கு பல்லை கடித்துக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் மாநில , மத்திய அரசுகளுக்கு எதிராக வாக்களிப்பர். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றார் அவர்.

Leave a Response