“60 வயது மாநிறம்” திரைப்பட விமர்சனம்..!

தலைமுறை காரணமாக தந்தை மகன் உறவில் ஏற்பட்ட இடைவெளியை, பாசம் எனும் ஒன்றை வைத்து ஒட்டும் படம் தான் 60 வயது மாநிறம்.

ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மையத்தில் தங்கவைப்பட்டிருக்கும் தந்தை கோவிந்தராஜை (பிரகாஷ் ராஜ்) பார்க்க மும்பையில் இருந்து சென்னை வருகிறார் மகன் சிவா(விக்ரம் பிரபு). மகனுடன் வெளியே செல்லும் போது காணாமல் போகிறார் பிரகாஷ்ராஜ். அவரை தேடி அழைகிறார்கள் விக்ரம் பிரவும், மருத்துவர் அர்ச்சனாவும் (இந்துஜா). இதற்கிடையே பெரிய பில்டர் ஒருவரிடம் அடியாளாக இருக்கும் ரங்கா (சமுத்திரக்கனி), தனது ஓனருக்காக அரசு அதிகாரி ஒருவரை போட்டுத் தள்ளுகிறார். காணாமல் போகும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனியிடம் சிக்கிக்கொள்கிறார். தந்தையை மகன் கண்டுபிடித்தாரா? ரவுடி சமுத்திரக்கனியிடம் மாட்டிக்கொள்ளும் பிரகாஷ்ராஜ் என்ன ஆனார் என்பது சுவாரஸ்யமான மீதிக்கதை.

கன்னட படம் ஒன்றில் ரீமேக் தான் இந்த 60 வயது மாநிறம் திரைப்படம். இதுவரை ரீமேக் படங்களை தவிர்த்து வந்த இயக்குநர் ராதாமோகன், ஏன் தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்பது படத்தை பார்க்கும் போது புரிகிறது.

மொழி, அபியும் நானும், பயணம் என வெற்றிப் படங்களை தந்த பிரகாஷ்ராஜ் – ராதாமோகன் கூட்டணியின் அடுத்த வித்தியாசமான படைப்பு தான் இந்த 60 வயது மாநிறம். தலைமுறை காரணமாக தந்தை மகன் உறவில் ஏற்படும் விரசலையும், தந்தை எனும் உறவின் மகத்துவத்தையும் மிக அழகாக தந்தமைக்காக இயக்குனர் ராதாமோகனுக்கு பாராட்டுக்கள்.

தந்தை – மகன் உறவு, மனிதம், காதல், காமெடி, பாசம் என பல விஷயங்களையும் சுவாரஸ்யமான திரைக்கதையால் இணைத்து விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர். சோகத்தையும் மென்புன்னகையுடன் சொல்லும் வித்தை ராதாமோகனுக்க கைவந்தக்கலை.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயது முதியவராக பிரகாஷ்ராஜ். வேறு யாராலும் இந்த அளவுக்கு இந்த பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்க முடியுமா என தெரியவில்லை. உதட்டில் எப்போதும் ஒரு புன்னகையுடன் வரும் அந்த முதியவர் கோவிந்தராஜ், ஒவ்வொரு தந்தையையும் ஞாபகப்படுத்துகிறார். பாராட்ட வார்த்தைகள் போதவில்லை பிரகாஷ்ராஜ். அந்த லைப் இஸ் பியூட்டிஃபுல் வீடியோ ஒன்று போதும், உங்கள் நடிப்பை பற்றி சொல்ல.

இதுவரை பார்த்திராத விக்ரம்பிரபுவை காட்டியிருக்கிறார் இயக்குனர். தந்தையை நினைத்து உருகும் காட்சி, இந்துஜாவுடனான காதல், போலீஸ் நிலையத்தில் ஏற்படும் கோபம் என நல்ல நடிப்பை தந்திருக்கிறார்.

அட்வைஸ் செய்யாமல், உரக்கப் பேசாமல் அண்டர்ப்பிளே ஆக்டிங்கில் சமுத்திரக்கனி. பார்வையிலேயே ஸ்கோர் செய்கிறார். அந்த பாத்திரம் அப்படி தான் நடந்துகொள்ளும் என நம்மாளும் உணர முடிகிறது.

மேயாத மான் இந்துஜாவுக்கு இது இரண்டாவது படம் தான். ஆனால் பல படங்களில் நடித்த முதிர்ச்சி தெரிகிறது நடிப்பில். வெறுமனே வந்துபோகாமல், மெல்லிய புன்னகையிலேயே உள்ளத்தை கொள்ளையடிக்கிறார். 60 வயது முதியவரையும், 30 வயது இளைஞனையும் அழகாக ஹெண்டில் செய்திருக்கிறார்.

ராதாமோகன் படம் என்றதுமே குமரவேலுக்கு டபுள் எனர்ஜி வந்துவிடும் போல. தனக்கே உரித்தான கவுண்டர் காமெடியில் கலக்கியிருக்கிறார். காசி, மதுமிதா, குமரவேல் காம்போ காட்சிகள் அனைத்துமே தியேட்டரில் அன்லிமிட்டெட் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது.

ராதாமோகன் ஒருபக்கம் கதை சொல்லுகிறார் என்றால், பின்னணி இசையால் இளையராஜா இன்னொரு பக்கம் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். அதுவும் பிரகாஷ்ராஜின் காதல் கதையை சொல்லும் போது, பின்னணி இசையால் அந்த இடத்துக்கே நம்மை அழைத்து செல்கிறார். அழவேண்டாம் என்று நினைத்து கண்ணீரை கட்டுப்படுத்தும் போது மேஸ்ட்ரோவில் இசை அதை சிந்தவைத்துவிடுகிறது. ‘இறைவனை தேடும் உலகில் மனிதனை தேடுகிறார்’ பாடல் காதுக்குள் நுழைந்து நெஞ்சிக்குள் ஊடறுத்துச் செல்கிறது.

ஒளிப்பதிவாகட்டும், படத்தொகுப்பாகட்டும், கலையாகட்டும், எல்லாமே சரியாக அளவில் மிக்ஸ் செய்த காக்டெயில் போல் இருக்கிறது. ‘அன்பு உள்ள இருந்தா மட்டும் போதாது வெளியவும் காட்டனும்’, ‘ஆயிரம் அன்பை உள்ள வெச்சிக்கிட்டு, விரோதியா தெரியுர ஒரே உறவு அப்பா தான்’ போன்ற விஜியின் வசனங்கள் நெஞ்சை பிளக்கச் செய்யும் ஈட்டிகள். வெள்ள நாய் கறுப்பு நாய் கதை இந்த சமூகத்தில் ஒரு மனிதன் எவ்வாறு வாழுகிறான் என்பதை ஆழமாக பிரதிபலிக்கிறது.

படத்தில் நிறைய இடங்களில் அயர்வு ஏற்படுகிறது. அதற்கு காரணம் படத்தின் நீளம். இன்னும் கூட கொஞ்சம் குறைத்திருக்கலாம். அதேபோல கிளைமாக்ஸ் காட்சியும் நீண்டுகொண்டே செல்லும், முடிவில் ‘அப்பாடா’ ஃபீலிங்கை தருகிறது.

இருப்பினும் 60 வயது மாநிறம் ஒரு நல்ல அனுபவம். நிச்சயமாக தியேட்டருக்கு சென்று அதை அனுபவிக்க வேண்டும்.

Leave a Response