திமுகவின் 2-ஆவது தலைவரானார் ஸ்டாலின்..!

திமுகவின் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இன்று பொதுக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவுகளால் மறைந்தார். இதையடுத்து அவரது பதவியில் ஸ்டாலினை அமர்த்துவது என்று மூத்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

இந்த பதவிக்கான தேர்தல் 28-ஆம் தேதி நடைபெறும் என்றும் அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்நிலையில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினை தவிர வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.

மேலும் வேட்புமனுக்களை வாபஸ் செய்ய நேற்றைய தினம் கடைசி நாள் என்ற நிலையில் ஸ்டாலின் தனது வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. இதனால் அவர் போட்டியின்றி திமுக தலைவராகிறார் என்று அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அறிவித்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் பொதுக் குழு அண்ணா அறிவாலயத்தில் கூடியது. இதில் தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து திமுகவினர் கலைஞர் அரங்கத்திலேயே கொண்டாட்டங்களில் குதித்தனர்.

திமுக தலைவராக ஸ்டாலின் வந்துள்ளதை திமுகவினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்து திமுகவை அண்ணாதுரை தொடங்கியபோது, அவருக்கு மதிப்பு கொடுத்து தலைவர் பதவியை காலியாக வைத்திருந்தார். அதன் பின்னர் கருணாநிதி தலைவரானார். அதைத் தொடர்ந்து தற்போது 2வது தலைவராக அவரது மகன் ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.

திமுகவில் துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள மு.க.ஸ்டாலின் தலைவர் பொறுப்புக்கு தற்போது உயர்ந்துள்ளார். எந்தப் போட்டியுமின்றி அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

Leave a Response