எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கலாம்-ப.சிதம்பரம் உறுதி..!

லோக்சபா தேர்தலில், பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தால், அச்சத்தை உருவாக்கி வரும் இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டின் சூழல் மாறிவிட்டது. பசு பாதுகாவல் என்ற பெயரில் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுகின்றனர்.

பல நூறு ஆண்டுகளாக சைவ உணவுப் பழக்கம் கொண்ட மக்களும், அசைவ உணவுப் பழக்கம் கொண்ட மக்களும் பிரச்சினைகள் இன்றியே வாழ்ந்து வந்தனர். ஆனால், தற்போது குறிப்பிட்ட இறைச்சியை வைத்திருப்பதன் காரணமாகவே பலர் அடித்துக் கொலை செய்யப்படுவது வேதனையாகும்.

இப்போதைய நிலையில், நாட்டில் ஜனநாயகமும், சுதந்திரமும் அறவே இல்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு சுதந்திரம் தரப்படவில்லை என்பதற்காகத்தான் விடுதலை போராட்டம் தொடங்கியது. இப்போதும் அதுபோன்ற ஒரு நிலை, நாட்டில் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டு ஆட்சிக் காலத்திலும் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தது. ஆனால், அதை குறைத்து மலினப்படுத்த மோடி அரசு முயன்று வருகிறது.

என்னதான் செய்தாலும், புள்ளி விவரங்களை ஒரு போதும் மறைக்க முடியாது. அதை மாற்றி அமைக்க முடியாது என்பதே உண்மை. அந்த விரக்தியால்தான் முந்தைய காங்கிரஸ் அரசின் மீது பிரதமர் மோடி வீண் பழிகளை சுமத்தி வருகிறார்.

தலித்துகள், முஸ்லிம்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோர் தற்போது அச்சுறுத்தலுடன் வாழ்கின்றனர். இந்த நிலை நீடிக்கக் கூடாது. அதற்கு மக்களைவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தியாக வேண்டும். தமிழகம், கேரளா உள்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த எண்ணம், வலுவாக இருக்கிறது.

ஒருமித்த சிந்தனை கொண்ட கட்சிகள் அனைத்தும் ஓரணியாகத் திரண்டால், நிச்சயமாக தேர்தலில் பாஜக வீழ்ச்சியை சந்திக்கும். அது போன்றதொரு கூட்டணி அமைந்தால் பிரதமர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் என்று கேள்வி எழுகிறது. அதனை தற்போது முடிவு செய்ய முடியாது. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Leave a Response