எனது தயவு இல்லாவிட்டால் திமுக தோல்வியைதான் சந்திக்கும்-அழகிரி மறைமுக பேச்சு..!

என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரை: என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த பிறகு ஸ்டாலின் – அழகிரி இடையேயான மோதல் முற்றியுள்ளது. கட்சிப்பதவிக்காக அழகிரி காத்திருக்கும் நிலையில் அதனை ஸ்டாலின் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை அண்ணாசாலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடத்தப்படும் என அறிவித்துள்ளார் அழகிரி. ஸ்டாலின் தரப்புக்கு தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த பேரணியை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் கட்சியின் தலைவராக அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்படவுள்ளார். இதனால் திமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையில் நேற்று முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார் அழகிரி. இன்று இரண்டாவது நாளாக தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு திமுக எந்த தேர்தலிலும் ஒருமுறைக்கூட வெற்றி பெறவில்லை என்றார்.

அழகிரி சொல்வது போலவே 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதேபோல் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற எந்த இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெறவில்லை.

மேலும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் திமுக தோல்வியை சந்தித்தது. ஸ்டாலின் கட்சி நிர்வாகத்தில் தலையிடும் வரை திமுக தோல்வியைதான் சந்திக்கும் என அழகிரி விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் தன்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு திமுக எந்த தேர்தலிலும் வெற்றி பெற வில்லை என அழகிரி கூறியிருப்பது, தனது தயவு இல்லாவிட்டால் திமுக தோல்வியைதான் சந்திக்கும் என அழகிரி மறைமுகமாக கூறுவதாக கருதப்படுகிறது.

Leave a Response