மாணவிகளை தவறான வழிக்கு அழைத்து செல்ல முயற்சித்தது உண்மைதான்; நிர்மலாதேவி ஒப்புதல் வாக்குமூலம்..!

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்து செல்ல முயற்சித்தது உண்மைதான் என நிர்மலாதேவி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி காவல் நிறைவடைந்து, தற்போது நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் நிர்மலா தேவி அடைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேலாண்மை கல்வி துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாணவிகளை தவறான வழிக்கு அழைத்து செல்ல முயற்சித்தது உண்மை தான் என பேராசிரியை நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி கூடுதல் எஸ்பி லாவண்யா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையில், முருகன், மற்றும் கருப்பசாமிக்காகவே மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி சிம் கார்டு, மெமரி கார்டு, லேப் டாப் உள்ளிட்ட 123 முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதவிர உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி நிர்மலா தேவியின் குரல் மாதிரி சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கை நடத்த சிறப்பு அரசு வழக்கறிஞராக ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
முனதாக, பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை வருகிற செப்டம்பர் மாதம் 24-ம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் விரைந்து விசாரித்து முடிக்க கிழமை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response