யமுனை நதிக்கரையில் வாஜ்பேயி உடல் தகனம் செய்யப்பட்டது..!!

வியாழக்கிழமை உயிரிழந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி உடல் யமுனை நதிக்கரையில் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

அடல் பிஹாரி வாஜ்பேயி
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோதி, பூடான் மன்னர், ஆப்கன் முன்னாள் அதிபர் அமீத் கர்சாய், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் அலி ஜஃபர், இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மண் கிரியல்ல உள்ளிட்ட பல தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

பாஜக தலைவர் அமித் ஷா, அத்வானி, இன்னாள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், தேசியத் தலைவர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

டெல்லியில் யமுனை நதிக்கரையில் ‘ஸ்மிரித் ஸ்தல்’ என்ற இடத்தில் உடல் எரியூட்டப்பட்டது. முப்படை வீரர்கள் வாஜ்பேயி உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். அவரது உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி பேத்தி நிகாரிகாவிடம் வழங்கப்பட்டது.

முப்படைத் தளபதிகள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, அதிமுக சார்பில் தம்பிதுரை, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பேயியின் குடும்ப முறைப்படியும், இந்து மத முறைப்படியும் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. 21 ராணுவ குண்டுகள் முழங்க அடல் பிஹாரி வாஜ்பேயி உடலுக்கு மரியாதை வழங்கப்பட்டது. பிறகு, சிதைக்கு வளர்ப்பு மகள் நமிதா தீ மூட்டினார்.

வாஜ்பேயின் இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்ற பிரதமர் நரேந்திர மோதி

பிரதமர் நரேந்திர மோதி, பாஜக தலைவர் அமித் ஷா உட்பட பாஜக தலைவர்கள் வாஜ்பேயின் இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றார்கள். இறுதி ஊர்வலம் சென்ற பாதைகளின் இருவோரங்களிலும் நின்றிருந்த மக்கள் கூட்டம் அவருக்கு பிரியா விடை கொடுத்தது.

Leave a Response