எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினிக்கு பேசுவதற்கு தைரியம் இருந்ததா-அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க கேள்வி..!

எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக சாடியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி காலமானதை அடுத்து நேற்றைய தினம் அவருக்கு திரைத்துறையினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஸ்டாலின், ரஜினிகாந்த் மற்றும் திரைத்துறையினர் கலந்து கொண்டனர்.

அப்போது ரஜினிகாந்த் பேசுகையில் கருணாநிதிக்கு மெரினா கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தால் நானே போராடியிருப்பேன் என்றார்.

இதைத் தொடர்ந்து மெரினாவில் கருணாநிதிக்கு இறுதிச் சடங்கில் முதல்வர் மற்றும் அமைச்சரவை சகாக்கள் கலந்து கொள்ளாததை விமர்சனம் செய்தார். அப்போது நீங்கள் என்ன எம்ஜிஆரா, ஜெயலலிதாவா என்று கேட்டார். மேலும் ஜாம்பவான்கள் அப்போது மோதிக் கொண்டனர். இப்போது அதெல்லாம் வேண்டாம் ரைட் என்று கேட்டார் ரஜினி.

இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. இவரது பேச்சை கேட்ட ரசிகர்கள் 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதாவை ரஜினி விமர்சனம் செய்ததை சமூகவலைதளங்களில் நினைவுகூர்ந்து கொண்டனர். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது ஜெயக்குமார் கூறுகையில், கருணாநிதியால்தான் அதிமுக உருவானது என்று தவறான கருத்தை ரஜினி கூறியுள்ளார். முதலில் மறைந்த ஒரு தலைவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியில் இதுபோல் அரசியல் பேசுவது ஆரோக்கியமான முறையல்ல.

அதிலும் அரசியலே தெரியாமல் வரலாறே தெரியாமல் ரஜினி வாய் புளித்தது மாங்காய் புளித்தது என்று பேசியது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. கருணாநிதியிடம் இருந்து விலகி எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் அதிமுகவே தவிர, கருணாநிதியால் உருவாக்கப்பட்டது அல்ல.

இதுபோல் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசுவதற்கு தைரியம் இருந்ததா. அப்போது ஓடி ஒளிந்து கொண்டார் ரஜினி. அவர்கள் முன்னால் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது என்று ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக சாடியுள்ளார்.

Leave a Response