மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ராஜன் கோஹெய்ன் மீது பலாத்கார வழக்கு பதிவு..!

மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ராஜன் கோஹெய்ன் மீது அசாம் மாநில காவல்துறையினர், பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான 24 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததோடு மிரட்டியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தாரை பிளாக்மெயில் செய்ததாகவும் அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. சபிதா தாஸ் கூறுகையில், ஆகஸ்ட் 2ம் தேதி அமைச்சருக்கு எதிராக வழக்கு பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது. விசாரணை ஏற்கனவே தொடங்கிவிட்டது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இருப்பினும் வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

இந்திய தண்டனைச் சட்டம் 417 (மோசடி), 376 (பலாத்காரம்) மற்றும் 506 (குற்ற நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் வாக்குமூலத்தையும் காவல்துறை பதிவு செய்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட சம்பவம் நடந்து ஏழு முதல் எட்டு மாதங்கள் இருக்கும் என்றும் அந்தப் பெண்ணும் அமைச்சரும் நீண்ட நாள் பழக்கம் கொண்டவர்கள் என்றும் அவ்வப்போது ராஜன் கோஹெய்ன், அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று வருவார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தார் வீட்டில் இல்லாத போது பலாத்கார சம்பவம் நடைபெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அமைச்சர் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

Leave a Response