கேரளாவில் தொடரும் கனமழை: வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு..!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலத்தில் பாதி பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு வெள்ள பாதிப்புகள் உள்ள நிலையில், இதன் காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இதில் 25 பேர் நிலச்சரிவாலும் 4 பேர் வெள்ளத்தில் மூழ்கியும் இறந்துள்ளனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தத்தளித்து வருகின்றனர்.

மாநிலத்தில் உள்ள 58 அணைகளில் 22 அணைகள் முழுவதும் நிரம்பிவிட்ட நிலையில் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இடுக்கி அணையின் ஒரு மதகு 26 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. அணைகள் திறக்கப்பட்டதால் தாழ்வான பகுதிகளில் நீர் வெள்ளமாக ஓடுகிறது. 40 ஆறுகள் கரை புரண்டு ஓடுகின்றன.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்களை தங்க வைக்க 439 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் பல வீடுகள் தீவு போன்று ஆகியுள்ள நிலையில் ராணுவத்தினர் தற்காலிக பாலங்கள் அமைத்து அவர்களை மீட்டு வருகின்றனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழுவீச்சில் மீட்புப் பணிகளில் உள்ள நிலையில் அப்பணிகளை முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் பார்வையிட்டார், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். மேலும் பாதிப்புகளை பார்வையிட அவர் நாளை கேரளா செல்கிறார்.

 

Leave a Response