ஊட்டி போல குளுகுளுவென மாறி காணப்படும் சென்னை : 2 நாட்களுக்கு மழை தொடருமாம்..!

சென்னை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நகரமே குளிர்ந்து போய்க் காணப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது மாலையில் சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வெப்ப நிலை தணிந்து குளுமை நிலவுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலையிலிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரமே குளிர்ந்து போய் விட்டது. ஊட்டி போல குளுகுளுவென மாறிக் காணப்படுகிறது தலைநகரம்.

புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் நகர்ப் பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. பேனைப் போட்டாலே குளிரும் அளவுக்கு தற்போது சென்னையில் கிளைமேட் மாறிப் போயுள்ளது. கிட்டத்தட்ட ஊட்டி அளவுக்கு குளிர்ச்சியான பிரதேசமாக மாறியுள்ளது சென்னை.

சென்னையின் பல பகுதிகளில் ஏன் புறநகர்ப் பகுதிகளிலும் கூட நிலத்தடி நீர் இறங்கிப் போய் மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது. தற்போது பெய்து வரும் மழை தொடர்ந்தால் இந்தப் பிரச்சினைக்கு தற்காலிகமாக ஒரு தீர்வு ஏற்படும் என்பதால் மக்கள் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே இந்த மழை இன்னும் 2 நாட்களுக்குத் தொடரும் என்று வானிலை மையம் மேலும் சந்தோஷச் செய்தியை அளித்துள்ளது.

Leave a Response