மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக சமாதியில் பால் ஊற்றி செல்கிறேன்-உருக்கமாக பேசிய வைரமுத்து..!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து காலையிலேயே பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே நேற்று மாலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் காலை முதலே திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து கருணாநிதியின் நினைவிடத்தில் இன்று காலையில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வைரமுத்து தனது மகன்கள் மதன் கார்க்கி, கபிலனுடன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பால் ஊற்றி, மலர் தூவி வைரமுத்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக சமாதியில் பால் ஊற்றி செல்கிறேன் என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்க முடியவில்லை. கருணாநிதி எழுதி வைத்த உயிலான சமூக நீதியை காப்பாற்றுவது தமிழ் சமுதாயத்தின் கடமை.

சூரியன் இல்லாமல் விடியல் வருமா என்பதை போல உள்ளது கருணாநிதியின் மறைவு. கருணாநிதி இல்லாமல் தமிழகத்தில் வளர்ச்சியில்லை. இவ்வாறு வைரமுத்து உருக்கமாக பேசினார்.

 

Leave a Response