8 வழிச்சாலையை எதிர்த்து கோயில்களில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் கைது..!

சென்னை – சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து வாழப்பாடி அருகே உண்ணாவிரதம் இருந்த 15 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால், ஆயிரம் ஏக்கருக்கு மேலான காடுகள், விளைநிலங்கள் அழிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்த 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீஸார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வாழப்பாடி அருகே குள்ளம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 15 பேர் பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் 8 வழிச்சாலையை எதிர்த்து நேற்று உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் 8 வழிச்சாலை திட்டத்தால் தங்களுடைய விளை நிலங்கள் பறிபோவதாக புகார் தெரிவித்தனர்.

குள்ளம்பட்டியில் 8 வழிச்சாலையை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது என்பது குறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர். கைதான 9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Response