பாஜகவின் கூட்டணியில் அதிமுக மட்டுமல்ல ரஜினியும் இருக்கிறார்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பாலகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி..!

அதிமுகவை ஒன்று சேர்த்து கூட்டணி வைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றும் இக்கூட்டணியில் ரஜினியும் இருக்கிறார் என்றும் அதற்காகவே ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சொத்து வரியை 100 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தி இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொத்து வரியை நிர்ணயிக்கும் அதிகாரம் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குதான் உண்டு. ஆனால், வரியை தமிழக அரசு சொத்து வரியை உயர்த்திருப்பது ஏற்புடையது அல்ல.

கடந்த இரண்டு வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 5000 கோடி ரூபாய் வாங்க முடியாமல் உள்ளது” என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

பின்னர், “கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் உபரி நீரை திறந்துவிட்டு ஜூலை, செப்டம்பர் மாதங்களுக்கான நீரை திறந்துவிட்டுவிட்டோம்” என்று கர்நாடகா முதல்வர் கூறியுள்ளார். இது கண்டனத்துக்கு உரியது. இதுகுறித்து தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தில் புகாரளிக்க வேண்டும்” என்று காட்டத்தோடு தெரிவித்தார்.

மேலும், “யுஜிசி-ஐ மத்திய அரசு கலைப்பது ஒட்டுமொத்த உயர் கல்வியை சீரழிக்கும்” என்றும் “சென்னையில் நடந்த இரயில் விபத்திற்கு முழு பொறுப்பு இரயில்வே துறைதான்” என்றும் குற்றம் சாட்டினார்.

“அதிமுகவை ஒன்று சேர்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அதனொரு பகுதிதான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம். இது அரசியல் பயணம்தான்” என்று அடித்து கூறினார்.

அதுமட்டுமின்றி கூடுதல் தகவலாக, “கூட்டணி குறித்து முடிவெடுக்கதான் இந்த பயணம்” என்றும் “இந்தக் கூட்டணியில் ரஜினி கூட இருக்கலாம்” என்றும் தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Response