`பா.ஜ.க-வை ஆதரிக்கும் கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்’ – சந்திரபாபு நாயுடு..!

‘மத்திய அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும்’ என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர தெலுங்கு தேசம் முடிவுசெய்தது. இது தவிர, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அளித்தன. அந்தக் கட்சிகள் வழங்கிய நோட்டீஸை ஏற்றுக்கொண்ட சுமித்ரா மகாஜன், “அதுதொடர்பான விவாதமும், அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பும் வெள்ளிக்கிழமை (20-ம் தேதி) நடைபெறும்” என்று அறிவித்திருந்தார்.

இதையடுத்து, மக்களவையில் நேற்று (20-ம் தேதி) மத்திய அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது, தெலுங்கு தேசம் கட்சி தொடங்கி பல கட்சி உறுப்பினர்களும் பேசினர். ஆனால், இவர்களைவிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதே நாடாளுமன்றத்தைப் பரபரப்பாக்கியது. அந்த அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல் காந்தி, குறிப்பாக, ரஃபேல் போர் விமானங்கள் குறித்துப் பேசினார். இந்த உரையின்போது, பிரதமர் மோடியையும்  கடுமையாக விமர்சித்திருந்தார். அத்துடன், தன் உரையை முடித்த ராகுல் காந்தி, பிரதமர் இருக்கைக்குச் சென்று மோடியைக் கட்டிப்பிடித்த செயலும் பிரபலமானது. அவர் ஆற்றிய உரையும் உலகளவில் டிரெண்டிங் ஆனது.

இதைத் தொடர்ந்து, நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பதிலளித்து உரையாற்றிய மோடி, காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டுகளுக்குத் தக்க பதிலடி கொடுத்தார். இப்படி ராகுல் காந்தியின் உரையாலும், மோடியின் உரையாலும் பரபரப்பானது  நாடாளுமன்றக் கூட்டத்தொடர். பின்னர், நீண்ட விவாதத்துக்குப் பிறகு நடைபெற்ற குரல் வாக்கெடுப்பிலும், மின்னணு வாக்கெடுப்பிலும் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியுற்றதையடுத்து, தெலுங்கு தேசத்தின் கனவு தகர்ந்தது.

நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, “முழு ஆந்திரப் பிரதேசமும் இன்று நீதியை எதிர்பார்த்துக் காத்திருந்தது, ஆனால், எங்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மத்திய அரசிடம் பெரும்பான்மை இருந்தாலும், அவர்கள் நீதியை நிலைநாட்டவில்லை. பிரதமர் மோடியின் இன்றைய பேச்சு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் எங்களைப் பார்த்து சுயநலவாதிகள் என்கிறார். ஆனால், உண்மையில் அவர்தான் சுயநலவாதி. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி கடந்த நான்கு ஆண்டுகளில் 29 முறை நான் டெல்லிக்குச் சென்றுள்ளேன். ஆனால், ஆந்திராவுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, அவர்கள் என்மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள்.

இந்தத் தொடர்ச்சியான மோதலின் ஒருபகுதியாகவே நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தோம். ஒரு நாட்டின் பிரதமர் பதவியில் இருப்பவர் பொறுப்பற்ற முறையில் பேசுவது வேதனையளிக்கிறது. எங்கள் வசம் போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியப் போக்குடன் நடந்துகொள்கிறது. ஆந்திராவுக்கு மத்திய அரசு செய்துள்ள துரோகங்கள் பற்றி இன்று டெல்லியில் இருந்தவாறு நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க உள்ளேன். மத்திய அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும். அதோடு நிற்காமல், பி.ஜே.பி-யை ஆதரிக்கும் கட்சிகளுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்” என்றார்.

Leave a Response