குடிக்க தண்ணீர் தரமுடியாத அரசுக்கு 8 வழிச் சாலையும், புல்லட் இரயிலும் தேவையா? தா.பாண்டியன்..!

குடிக்க தண்ணீர் தரமுடியாத அரசுக்கு 8 வழிச் சாலையும், புல்லட் இரயிலும் தேவையா? என்று தா.பாண்டியன் கேள்வி கேட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், “தமிழ்நாட்டில் நகரம் மற்றும் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களுக்கு குடிக்க தண்ணீர் தரமுடியாத அரசுக்கு 8 வழிச் சாலையும், புல்லட் இரயிலும் தேவையா? என்பதை ஒரு முறைக்கு பலமுறை இந்த அரசு யோசிக்க வேண்டும். இந்த திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது மக்களை காக்கும் திட்டமாக தெரியவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக் காக நிறைவேற்றப்படும் திட்டமாகவே தெரிகிறது.

மத்திய அரசு கல்வித்துறையிலே தலையிட்டு, வருங்கால சந்ததியோடு விளையாடக் கூடாது. கல்வியாளர்களை வைத்து ஆழமாக சிந்தித்து திட்டங்களை அறிவிக்க வேண்டும். யு.சி.ஜி., ஐந்தாண்டு திட்டக்குழுவை அழித்தனர். நிதி முறையை மாற்றி அமைத்தனர். பாராளுமன்றத்தை செயல்படாமல் ஆக்கிவிட்டனர்.

அதேபோல கல்வித்துறையிலும் ஒரு தனி மனிதன் நினைப்பதையெல்லாம், கல்வித் திட்டமாக கொண்டுவந்து இளம் சந்ததியோடு விளையாடுவது என்பது முழுக்க முழுக்க தவறானது.

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி என்பது தேவையில்லை. அந்தந்த மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, வளர்ச்சிக்கு ஏற்ப கல்வி திட்டங்களை வகுக்கிற முழு உரிமை மாநில அரசிடம் இருக்க வேண்டும். அதிலே மத்திய அரசு தலையிடக் கூடாது.

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை. ஏனென்றால் இந்த நாடு ஒரே வளர்ச்சி முறையிலே வரவில்லை. இதனை யாருமே விரும்பவில்லை. எனவே, சிக்கனம் என்ற பெயரில், தற்போது ஒரே நாளிலேயே தேர்தலை நடத்திவிடுவேன் என்பதற்கு பதிலாக, வெளி நாடுகளுக்கு பிரதமர் செல்லும் செலவை முதலில் சுருக்க வேண்டும்.

உலக மயம் என்று சொல்லி எங்கே மலிவாக கிடைக்கிறதோ, அங்கு பொருட்கள் வாங்குவதுதான் புத்திசாலித்தனம். அமெரிக்காவின் உத்தரவிற்கு பயந்து, டாலரை கொடுத்து பெட்ரோலை வாங்க வேண்டியதில்லை.

ரூபாய்க்கு பெட்ரோல் தருகிறேன், கோதுமையை பெற்றுக்கொண்டு பெட்ரோல் தருகிறேன், கத்தரிக்காய் வாங்கிக் கொண்டு பெட்ரோல் தருகிறேன், கடனாக தருகிறேன், கப்பலில் வரவில்லையென்றால், குழாய் மூலம் அனுப்புகிறேன் என்றெல்லாம் ஈரான் சொல்லும்போது, அத்தனையும் நிராகரித்துவிட்டு அமெரிக்கா கோபித்துக் கொள்ளும் என்று அஞ்சும் கோழைகள் ஆளுகின்ற வரையில் நாம் இந்த கப்பம் கட்டியாக வேண்டும்.

“ஊழல் நிறைந்த மாநிலம்” என அமித்ஷா கூறியிருக்கிறார். அவர் கண்ணாடியின் முன் நின்று தன்னை பார்த்தே சொல்லிக் கொள்ளட்டும். அவரது மகன் எவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பது தெரியும். இரண்டு ஆண்டுகளில் 16 ஆயிரம் மடங்கு சொத்து சேர்த்துள்ளார். அவர் சொன்னதை வைத்து தமிழகத்தில் ஊழல் உள்ளதா? என்று சொல்ல தேவையில்லை.

“கல்வி வளர்ச்சி நாள்” என்று கூறி, ஞாயிற்றுக் கிழமையன்று பள்ளிக் கூடத்துக்கு மாணவர்களை வரவழைத்துவிட்டு அரசாணை வரவில்லை என்று திருப்பி அனுப்பியது நிர்வாக முறைகளில் உள்ள குளறுபடிகள். முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Leave a Response