திருநெல்வேலி – நாகர்கோவில் இடையே நடத்துநர் இல்லாத நவீன பேருந்துக்கள்..!

திருநெல்வேலி – நாகர்கோவில் இடையே நடத்துநர் இல்லாத நவீன பேருந்துக்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இருப்பிடத்தைக் கண்டறியும் ஜி.பி.எஸ். கருவி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, அவசர கால வழி உள்ளிட்ட அம்சங்களுடன் நவீன பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் தானியங்கி பிரேக் வசதி, கவனக்குறைவாக வண்டி ஓட்டும்போதும், ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருந்து பேருந்து விலகி ஓடும்போதும் அதை எச்சரிக்கும் வகையில் அலாரம் ஆகியவை இந்த நவீன பேருந்துகளின் சிறப்புகள்.

இந்த நவீன பேருந்துகளில் நடத்துநர் கிடையாது. இந்த பேருந்து சேவையை சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த புதிய பேருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து சேவை திருநெல்வேலியில் நேற்று தொடங்கியது.

ஒவ்வொரு பேருந்தும் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு ஐந்து முறையும், நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு ஐந்து முறையும் இயக்கப்படும்.

இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் பணிகளுக்கு டிக்கெட் வழங்க திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு வசதியாக தனி கவுண்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல நாகர்கோவில் பேருந்து நிலையத்திலும் டிக்கெட் வழங்க தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து சேவை படிப்படியாக திருநெல்வேலி – தூத்துக்குடி, திருநெல்வேலி – தென்காசி ஆகிய வழி தடங்களிலும் இயக்கப்படுமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Response