சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் காண வந்த “ஸ்டாலின்” மகன் “உதயநிதி ஸ்டாலின்”..!

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வந்தது. ஒத்திகை பார்க்கத்தான் என்று பரவலாக பேச்சு எழுந்துள்ளது. கடந்த 6 மாத காலமாக தி.மு.க நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார். உதயநிதி ஸ்டாலின். தி.மு.கவின் அடுத்த வாரிசை உருவாக்கும் முயற்சியாக சென்னையில் நடைபெறும் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளுக்கும் தவறாமல் உதயநிதியை அழைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.

இதனை அடுத்து தி.மு.க நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று வந்த உதயநிதி அண்மைக்காலங்களில் முதல் முறையாக இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். திடீரென ஸ்டாலின் மகன் உதயநிதி ஏன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார் என்று பலரும் குழம்பிப்போயினர். பின்னர் தான் அவரது நெருங்கிய நண்பரும், அவரது ரசிகர் மன்ற தலைவருமான திருச்சி திருவெறும்பூர் எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் இன்று சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீது பேசுவது தெரியவந்தது. தனது நண்பர் சட்டப்பேரவையில் பேசுவதை காணவே உதயநிதி வந்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் உண்மையில் அவர் சட்டப்பேரவைக்கு வந்தது சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் காணத்தான் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானாவர்கள். அடுத்த சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் உதயநிதி களம் இறக்கப்படுவார் என்கின்றனர் அவரது ரசிகர் மன்றனத்தினர்.

இதற்காகவே அண்மைக்காலமாக தி.மு.க போராட்டங்களில் உதயநிதி தலைகாட்டத் தொடங்கியுள்ளார். மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கல்யாணம், காது குத்து எனகட்சி தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் உதயநிதி பங்கேற்று வருகிறார்.அடுத்ததாக சட்டப்பேரவைக்கு செல்லும் நிலை வரும் என்பதால் தற்போதே அதற்கு தன்னை உதயநிதி தயார்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.அதன் ஒரு கட்டமாக உதயநிதி சட்டப்பேரவைக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் உதயநிதி போட்டியிட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்கின்றனர், தி.மு.கவினர். ஏனென்றால் அந்த அளவிற்கு தீவிர அரசியிலில் ஈடுபடுவது என்று உதயநிதி முடிவெடுத்துவிட்டார்.

மேலும் அரசியல் ரீதியாக ரஜினி, எடப்பாடி பழனிசாமி போன்றோரை விமர்சித்து ட்விட்டரில் அவ்வப்போது உதயநிதி கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான ஆயத்தமாகவே உதயநிதி சட்டப்பேரவைக்கு வந்துள்ளார் என்பது இதன் மூலம் தீர்க்கமாக தெரியவருகிறது.

Leave a Response