பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் குள்ளம்பட்டி கிராம மக்கள் அம்மனிடம் மனு அளித்து வழிபாடு..!

சேலம்: பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்திலுள்ள குள்ளம்பட்டி கிராம மக்கள் அம்மனிடம் மனு அளித்து வழிபட்டனர்.

சேலம்-சென்னை இடையே பசுமை வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 277 கிலோ மீட்டரில் நிலம் கையகப்படுத்தும் பணியினை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதனால் விளைநிலங்கள், பசுமை காடுகள், மலைகள், நீர் நிலைகளை என வளங்களை அழித்து பசுமை வழிச்சாலை அமைக்கப்படுவது 5 மாவட்ட மக்களையும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்ப்புகளை பதிவு செய்ய போராட்டம், தற்கொலை முயற்சி, ஆர்ப்பாட்டம், என நடத்தி வருகின்றனர். மேலும் பெண்கள் கண்ணீர் விட்டு கதறினர். சிலர் தங்கள் நிலங்களில் கற்கள் நடும்பணியினை பார்த்து சிலர் மயங்கியும் விழுந்தனர்.

இந்நிலையில், இந்த பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மற்றொரு முயற்சியில் சேலம் மாவட்டத்திலுள்ள குள்ளம்பட்டி மக்கள் இறங்கியுள்ளனர். குள்ளம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் கிராமமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, மனு அளித்தனர். அந்த மனுவினில், சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நடைபெற்று வரும் பணிகளை தடுத்து நிறுத்தக்கோரியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அம்மனிடம் மனுவை அளித்த பின்னர் அனைவரும் வழிபட்டனர். பின்னர் வழிபாடு நடத்திய கோயில் பூசாரிக்கு திடீரென்று உடம்பில் சாமி வந்தது. அப்போது நிலம் எடுப்பதை எதிர்த்து பூசாரி சாபம் அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Response