ஆந்திரா மெஸ் – விமர்சனம்..!

அறிமுக இயக்குனர் ஜெய் இயக்கத்தில் வந்திருக்கும் இந்த ‘ஆந்திரா மெஸ்’ திரைப்படமும் ஷேம் பிளாக் ஹூயூமர் ரகம் தான். நான்கு திருடர்களின் வாழ்க்கையில் நடக்கிற சம்பவங்கள் தான் கதை. வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் ராஜ் பரத், பாலாஜி, மதி, ஏ.பி.ஸ்ரீதர் ஆகிய நான்கு பேரும் தாதா வினோத்திடம் அடியாட்களாக வேலைக்குச் சேர்கிறார்கள்.

வழக்கம் போல தாதா வினோத் கடன் வாங்கிய ஒருவரின் வீட்டிலிருந்து பெட்டி ஒன்றை எடுத்து வர அடியாட்களை அனுப்புகிறார். பெட்டியை திறந்து பார்த்தால் அதில் கோடிக்கணக்கில் பணம் இருப்பது தெரிய வருகிறது. பெட்டியை தாதாவிடம் கொடுக்காமல் அதை எடுத்துக் கொண்டு ஆந்திராவில் உள்ள ஒரு மலைப்பிரதேசத்தில் தனது இளம் வயது மனைவியான தேஜஸ்வினியுடன் வசிக்கும் மாஜி ஜமீன்தார் அமரேந்திரன் வீட்டில் அடைக்கலம் ஆகிறார்கள்.

தேஜஸ்வினியை பார்த்த மாத்திரத்தில், அழகில் சொக்கிப் போய் அவருக்கு தூண்டில் போடுகிறார் ராஜ் பரத். இந்தக் கள்ளக் காதல் ஒரு பக்கம் ஸ்மூத்தாக போய்க்கொண்டிருக்கும் போதே பணத்தை இழந்த தாதா தன் கூட்டாளிகளோடு நால்வரையும் தேடி ஆந்திரா வருகிறார். ராஜ் பரத் – தேஜஸ்வினி கள்ளக் காதலின் பைனல் டச் என்னவானது? வில்லனிமிருந்து நால்வர் கூட்டணி தப்பித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

பிளாக் ஹீயூமர் என்று சொல்லி படத்துக்கு விளம்பரப்படுத்தப்பட்டாலும் படத்தில் சிரிப்பை வரவழைக்கக் கூடிய காட்சிகள் என்பது அரிதிலும் அரிதாகத்தான் இருக்கிறது. ஏ.பி.ஸ்ரீதர், ராஜ்பரத், பாலாஜி, மதி நால்வரும் திருடர்களாக நடித்திருக்கிறார்கள். ராஜ் பரத் தான் இதில் ஹீரோ என்பதற்கு தேஜஸ்வினியுடன் அவர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளே போதும்!

கண்களில் எப்போதுமே போதையை ஏற்றிக் கொண்டது போல் காட்சிகளில் எண்ட்ரி கொடுக்கும் போதெல்லாம் சொக்க வைக்கிறார் தேஜஸ்வினி. அவருடைய நல்ல உசரமும், அதே அளவுக்கு உயர்ந்த ஹீரோவான ராஜ் பரத்துக்கு பெர்பெக்ட் மேட்ச்! அதிகம் நடிக்கத் தேவையில்லாமல் முக பாவனைகளிலேயே முரட்டுத்தனத்தை காட்டி நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர். தமிழ்சினிமா இவரை இன்னும் பல கேரக்டர்களில் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டியிருக்கும் பூஜா தேவாரியாவுக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை. முழுப்படத்தையும் செம்மண் கலர் டோனில் லைட்டிங்க்கை கையாண்டு வித்தியாசமான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் முகேஷ். ஜமீன்தார் வீடு செட்டை தத்ரூபமாகக் காட்டிய வகையில் ஆர்ட் டைரக்டரின் உழைப்பு தெரிகிறது!

பழைய ஜெய்சங்கர் – கர்ணன் காம்பினேஷனில் வந்த படங்களில் கேட்டது போன்ற பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் பிரசாந்த் பிள்ளை. பாடல்கள் ரகமாக இருக்கிறது.

முதல் படத்தையே டெக்னிக்கலாகவும் ஹாலிவுட் பாணி தமிழ்ப்படமாகவும் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜெய்.

மசாலாவை இன்னும் கொஞ்சம் கூட்டி, சரியான கலவையாக செய்திருந்தால் அசல் ‘ஆந்திரா மீல்ஸ்’ ஆகியிருக்கும்!

Leave a Response