லாரிகள் வேலை நிறுத்தம்.. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றிவரும் லாரிகளின் வருகை குறைந்ததால், காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த பின்னரும், இந்தியாவில் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை தினம் தினம் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால், 3 மாதங்களுக்கு ஒருமுறை டீசல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம் செய்துவருகின்றானர். தமிழகத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் நேற்று முதல் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றிவரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், மார்க்கெட்டுக்கு வருகிற காய்கறிகளின் அளவும் வெகுவாக குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் மொத்த காய்கறி வியாபாரி ராஜேந்திரன் ஊடகங்களிடம் கூறுகையில், “லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றிவரும் லாரிகளின் எண்ணிகை குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு வழக்கமாக 350 லாரிகள் வரும். ஆனால், இரவு 220 லாரிகள் மட்டுமே வந்ததால், காய்கறிகளின் வரவும் குறைந்துள்ளது. இதனால், கேரட், பீட்ரூட், பீன்ஸ், தக்காளி ஆகிய காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. லாரிகளின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் காய்கறிகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.” என்று கூறினார்.

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய பொருட்களின் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மத்திய அரசு லாரி உரிமையாளர்களின் கோரிகையைப் பரிசீலிக்க பேச்சுவார்த்தைக்கு அழைக்கவிலை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response