8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு:சேலம் போலீஸ் போட்ட வழக்கு-முன்ஜாமீன் கோரி சீமான் மனு..!

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக எதிர்ப்புத் தெரிவித்து வருபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை தீவிர முனைப்புடன் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களை உடனடியாக காவல்துறை கைது செய்து வருகிறது.

இந்த திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் குரல் எழுப்பி வரும் நிலையில், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளை காவல்துறை கைது செய்து வருகிறது.

இந்நிலையில், இந்த திட்டத்தை எதிர்த்து கருத்து தெரிவித்த காரணத்திற்காக நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நில அளவீட்டின் போது எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதற்காக சமூக ஆர்வலர் வளர்மதி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த மே 14 தேதி சேலத்தில் பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டி, முன் ஜாமீன் கேட்டு சீமான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே, சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அடுத்தடுத்த கைதுகளால் சேலம் மாவட்ட மக்களும், விவசாயிகளும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால், விரைவில் அடுத்தகட்ட போராட்டம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Response