அருவங்காடு வெடிமருந்து ஆலையை மூட எதிர்ப்பு.. 1000-க்கும் மேற்பட்டோர் திடீர் உண்ணாவிரத போராட்டம்..!

நீலகிரியிலுள்ள அருவங்காடு வெடிமருந்து ஆலையை மூட எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. பாதுகாப்புத்துறை கீழ் இயங்கும் இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதுமட்டுமின்றி இங்கு ஒப்பந்த தொழிலாளர்களும் பணியில் உள்ளனர்.

இந்த வெடிமருந்து தொழிற்சாலையை மூடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அத்துடன் இதனை தனியாருக்கும் தாரை வார்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடிமருந்து ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ள இந்த போராட்டத்தில் மத்திய அரசு ஆலையை மூடும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என கோரிக்கைகள் பலமாக முழக்கமிடப்பட்டு வருகிறது.

“நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த எச்பிஎப் போட்டோ தொழிற்சாலையையும் இழுத்து மூடப்பட்டுவிட்டது. தற்போது, வெடிமருந்து தொழிற்சாலையையும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்து வருகிறது. இவ்வாறு இருக்கும் தொழிற்சாலைகளை தனியார் வசம் ஒப்படைத்துவிட்டால், தொழிற்சாலைகளே இல்லாத மாவட்டமாக நீலகிரி மாவட்டம் ஆகிவிடும், இதனால் தாங்கள் வேலைஇழக்க நேரிடும்” என்றும் ஆலை தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Leave a Response