சாலைத் திட்டத்தின் பாதிப்பு பற்றிப் பேசினாலே கைதா? திமுக போராட்டத்தில் குதிக்கும்:ஸ்டாலின் எச்சரிக்கை..!

சேலம் – சென்னை இடையே போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை கைது செய்வது தொடர்ந்தால் பெரிய போராட்டம் நடத்த வேண்டி வரும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் – சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக முதல்வர் சட்டசபையில் சென்ற வாரம் அறிவித்துள்ளார். இந்த சாலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த சாலையால் பல ஆயிரக்கணக்காக விளை நிலங்கள் பாதிக்கப்பட உள்ளது. இதற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது இந்த சாலைக்கு எதிராக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், சேலம்-சென்னை சாலை மக்களின் கருத்துகளை அறியும் முன்பே போடப்படுகிறது.அவசரமாக நிலங்களை அளவிடுவது கண்டனத்திற்குரியது.மக்களை தேவையில்லாமல் அரசு கைது செய்கிறது.

சேலம் மக்களை கைது செய்தால் போராட்டம் வெடிக்கும்.ஆச்சான்குட்டைப்பட்டி, புதூரில் நில அளவீட்டை எதிர்த்த மக்களை போலீஸ் கைது செய்தது. சாலைத் திட்டத்தின் பாதிப்பு பற்றிப் பேசினாலே கைதா?.

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராடிய மக்களை இரவோடு இரவாக கைது செய்தது போல இங்கும் கைது செய்கிறார்கள். அரசு நடத்தும் இந்த கொடுமையான செயலை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம், என்று கூறியுள்ளார்.

Leave a Response