எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்: நீதிபதி எச்சரிக்கை..!

நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி இழிவான கருத்தைப் பதிவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாவிட்டால் பிடி ஆணை பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவருடைய கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் பலரும் எஸ்.வி.சேகரின் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து வருகிறார். அந்த வகையில், இதே பிரச்னை தொடர்பாக, திருநெல்வேலியைச் சேந்த பத்திரிகையாளர் ஐ.கோபால்சாமி திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று திங்கள்கிழமை திருநெல்வேலி முதலாவது நடுவர் மன்றத்தில் நீதிபதி ராம்தாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகரின் சார்பில் ஆஜரான ஹரி என்ற வழக்கறிஞர் “எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்டார். இதையடுத்து, நீதிபதி ராம்தாஸ் வருகிற ஜூலை 12 ஆம் தேதி எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் பிடி ஆணை பிறக்கப்படும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதனால், தலைமறைவாக இருந்துவரும் எஸ்.வி.சேகர் வருகிற ஜூலை 12 ஆம் தேதி திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Response