வழக்கு வாபஸ் : தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏ முடிவு-18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலா? பரபரப்பில் அரசியல்..!

தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச் செல்வன் திட்டமிட்டுள்ளார். பிற தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களும் இப்படி வழக்கை வாபஸ் பெற்றால், விரைவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் வழக்கில், ஹைகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. எனவே, 3வது நீதிபதிக்கு வழக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நீதிபதி யார் என்பது குறித்து இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, வழக்கை வாபஸ் பெறும் முடிவுக்கு தகுதி நீக்கத்திற்கு உள்ளான எம்எல்ஏ தங்க தமிழ்ச் செல்வன் வந்துள்ளார்.

வழக்கில் ஏற்கனவே தாமதமாகிவிட்டதால், இன்னும் வழக்கு நீண்டு கொண்டே செல்வதை அவர் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். ஹைகோர்ட் 3வது அமர்வு, பிறகு உச்சநீதிமன்றம் என வழக்கு இழுபறியில் இருந்தால் அடுத்த பொதுத் தேர்தலே வந்துவிடும் என்பது அவரது எண்ணமாக உள்ளதாம். எனவே, வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு தேர்தலை சந்திக்கும் முடிவுக்கு வந்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், எனது ஆண்டிப்பட்டி, தொகுதி மக்களுக்கு என்னால் எந்த நன்மையும் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே எனது மக்களை நம்பி தேர்தலை சந்திக்க நான் தயாராகிவிட்டேன். இடைத் தேர்தலில் வெற்றி பெற்று நான் எம்எல்ஏவாக சட்டசபைக்கு செல்ல விரும்புகிறேன். இது எனது தனிப்பட்ட முடிவு. மற்ற 17 எம்எல்ஏக்கள் முடிவு பற்றி தெரியாது என்றார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் அளித்த பேட்டியில் தங்க தமிழ்ச் செல்வன் தனது முடிவில் உறுதியாக உள்ளார் என்றார். 3வது நீதிபதி நியமனம் செய்யப்பட்டதும், அவரிிடம் சென்று வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ்ச் செல்வன் முடிவு செய்துள்ளார். இதே முடிவுக்கு பிற தகுதி நீக்க எம்எல்ஏக்களும் வந்தால், 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் வாய்ப்புள்ளது.

ஒரு மினி சட்டசபை தேர்தலை போல 18 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்பதால், 18 பேரின் முடிவால் தமிழக அரசியல் அரசியல் களம் சூடுபிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் ஆளும் கட்சியை எதிர்த்து எளிதில் வென்றதை போல, தாங்களும் வெல்லலாம் என்ற முடிவில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பலரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

Leave a Response