காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்த நதிநீர் பங்கீட்டின் அளவின்படி தண்ணீர் திறந்து விடப்படும்-முதலமைச்சர் குமாரசாமி உறுதி..!

கர்நாடக மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருவதால் காவிரி நதிநீர் பங்கீட்டில் பிரச்சனை எதுவும் இருக்காது என தெரிவித்துள்ள முதலமைச்சர் குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையம் சொன்னதைச் செய்வோம் என கூறினார்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய, மனைவி, மகனுடன் நேற்று மாலை தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அவரை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் கோவில் பட்டர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

மீனாட்சி அம்மனை வழிபட்ட குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விவசாயிகளுக்கு உதவுவதற்காக மழை வேண்டி அம்மனிடம் பிரார்த்தனை செய்தேன். தற்போது கேரளாவிலும், கர்நாடகத்திலும் பருவமழை பெய்து வருகிறது. தற்போது நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் கர்நாடக பாசனத்துறை அதிகாரிகளை அழைத்து கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

எனது அரசு தண்ணீர் தருவதில் சட்டபூர்வமான அணுகு முறை தான் மேற்கொண்டு உள்ளது. 2 மாநிலங்களுக்கும் நீர் பங்கீட்டில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்த நதிநீர் பங்கீட்டின் அளவின்படி தண்ணீர் திறந்து விடப்படும் உன அவர் உறுதி அளித்தார்.

தமிழகத்தில் உள்ள விவசாயிகளும் எங்களோட பிரதர்ஸ்தான் என தெரிவித்த குமாரசாமி, இயற்கை என்பது இருமாநிலத்திற்கும் பொதுவானது தான். என கூறினார். பெங்களூரு வந்த கமல்ஹாசன் அரசியல் சம்பந்தமாக என்னிடம் பேசவில்லை என்றும், தண்ணீர் திறந்து விடுவது சம்பந்தமாகவே என்னிடம் பேசினார் என்றும் குமாரசாமி தெரிவித்தார்.

Leave a Response