பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை இல்லை-ராம்நாத் கோவிந்த் அதிரடி முடிவு..!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்ததையடுத்து அவர்களின் விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நாண்டு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக 7 பேரின் குடும்ப விவரங்கள், உடல் நிலை, போன்றவை குறித்து அறிக்கை அனுப்புமாறு மத்திய அரசு, மாநில அரசை கேட்டிருந்தது. அதன்படி மத்திய அரசு கேட்ட அனைத்து விவரங்களையும் மாநில அரசு அனுப்பியிருந்தது. இதையடுத்து ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் தற்போது தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படியே இந்த விவகாரத்தில் அவர் முடிவெடுக்க முடியும் என்பதால், உள்துறை 7 பேரின் விடுதலை கூடாது என அறிவுறுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

மாநில அரசின் கோரிக்கையில் மத்திய அரசு ஒத்துப்போகவில்லை எனவும் உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரிலே குடியரசுத் தலைவர் தமிழக அரசின் மனுவை நிராகரித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன..

இந்நிலையில் முன்னாள் பிரதமர் கொலைக்குற்றவாளிகள் எந்த சூழலிலும் சுதந்திரமாக நடமாட முடியாது” என உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response