பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர் நடராஜன்..!

நிலத்தடி நீர் மட்டத்தினை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று கமுதியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் வலியுறுதினார்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி யூனியன் பேரையூர் கிராமத்தில் கிராம சுயாட்சி இயக்க திட்டத்தின் கீழ் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியது: “மத்திய அரசு இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக 115 மாவட்டங்களை தேர்வு செய்துள்ளது. அதில் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும்.

இதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிராம சுயாட்சி இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 34 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி முதல் மே 5-ஆம் தேதி வரையிலான நாட்களில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை 100 சதவீதம் பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது 2-ஆம் கட்டமாக மாவட்டத்தில் மீதம் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம சுயாட்சி இயக்க திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

இதில் கிராமங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை, எளியவருக்கு விலையில்லாமல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டம், மின் சிக்கனத்தினை ஏற்படுத்திடும் வகையில் பயனாளிகளுக்கு எல்.இ.டி. மின்விளக்குகள் வழங்கும் திட்டம், அனைவருக்கும் புதிய வங்கி கணக்கு துவங்கும் திட்டம், விபத்து காப்பீடு திட்டம் உள்ளிட்ட திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதுதவிர கிராமப்புற பொதுமக்கள் குப்பை மற்றும் கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அதற்கான குப்பை தொட்டிகளை பயன்படுத்தி தங்களது குடியிருப்புகளையும், சுற்றுப்புறத்தினையும் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.

அதேபோல குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். முறைகேடான இணைப்புகள் மூலம் குடிநீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தினை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் பரமக்குடி உதவி ஆட்சியர் விஷ்ணுசந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, வெங்கடேசுவரன், தாசில்தார் முருகேசன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Leave a Response