“காலா” திரைப்பட விமர்சனம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம் காலா. திருநெல்வேலியிலிருந்து மும்பை தாராவிக்கு சென்று தாதாவாக இருக்கும் காலா தன்னுடைய மக்களின் நிலங்களை அபகரிக்க வரும் அரசியல்வதிகள் மற்றும் நில மாஃபியாக்களிடம் இருந்து அவற்றை காப்பாற்ற நடத்தும் யுத்தம் தான் படத்தின் மைய்யக்கரு.

நிலம் என்பது ஒரு சாதாரண குடிமகனின் உரிமை என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூலமாக சொல்ல முயல்கிறார் இயக்குனர் ரஞ்சித். படத்தின் கதை மிகவும் சிம்பிள். தமிழ்நாட்டின் திருநெல்வேலியிலிருந்து குடிபெயர்ந்து மும்பையின் தாராவியில் செட்டில் ஆகும் காலா அந்த நகரத்தை உருவாக்கவும், சிறப்பாக இயங்கவும் உதவுகிறார். மோசமான அரசியல்வாதி மற்றி நில மாஃபியாவின் பார்வை அந்த பகுதியின் மீது விழ அவர்கள் அந்த பகுதி மக்களை அங்கிருந்து மாற்ற முயல்கிறார்கள். அது வெற்றிகரமாக முடிந்ததா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நிலத்தின் முக்கியத்துவம் மற்றும் அதிகார பசியில் உள்ளவர்கள் கீழ்மட்ட்டத்தில் உள்ளவர்கள் மீது எப்படி அடக்குமுறையை பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர்த்தும் அனிமேட்டட் கதையுடன் தொடங்குகிறது காலா திரைப்படம். கருப்பு வெள்ளையிலிருந்து உடனடியாக தற்கால பல வண்ண வாழ்க்கைக்கு தாவுகிறது படம். டிஜிட்டல் தாராவி, பியூர் மும்பை போன்ற திட்டங்களை முன்வைத்து குடிசை பகுதிகளை அழித்து அந்த நிலத்தை கைப்பற்ற அரசியல்வாதிகள் வருவதாக படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது மத்திய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் இந்தியா மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தை உணர்த்துவது போல் உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு படத்தில் அருமையான ஓப்பனிங் அமைத்துள்ளார் ரஞ்சித். காலாவை கிங் ஆஃப் தாராவியாக காட்டும் பொழுது படத்தின் வேகம் அதிகரிக்கிறது. கபாலி படத்தை போலவே இந்த படத்திலும் காலாவுக்கு லவ் டிராக் வைத்துள்ளார் ரஞ்சித். காலாவின் முன்னாள் காதலியாக ஹியூமா குரேஷி அருமையாக நடித்திருக்கிறார். இருவருக்கும் இடையேயான அருமையான டின்னர் காட்சி ஒன்றை அமைத்து அப்ளாஸ் வாங்கியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.

படத்தின் முதல் பாதிக்கு முன்னதாக மும்பை மேம்பாலத்தில் வழக்கமான மசாலா ஸ்டண்ட் ஒன்றை விஎஃப்எக்ஸ் உதவியுடன் அமைத்திருக்கிறார். இது ரஜினியின் முந்தைய பழைய படங்களை நினைவுப்படுத்துகிறது. இது ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. காலாவின் எதிரியாக நானா படேகர் வரும்போது படத்தின் விருவிருப்பு கூடுகிறது.

.

இடைவேளைக்கு பின்னர் வரும் காட்சிகளை முன்னரே யூகிக்கும் அளவுக்கு எடுத்து சொதப்பியிருக்கிறார் ரஞ்சித். மேலும் இடைவேளைக்கு பின்னர் ரஞ்சித் தனது வழக்கமான ஸ்டைலில் அரைத்த மாவை அரைத்து படத்தை கொண்டு செல்கிறார். கீழ்மட்டத்தில் உள்ளவர்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒடுக்குவது, என  வழக்கம் போல இது ரஞ்சித் படம் என சொல்லும் அளவுக்கு. இயக்குனருக்கு ஏற்றவாரு ரஜினி நடித்துள்ளார்.

ரஜினியை ஒரு ராவணனாகவும் வில்லனை ராமரைப்போன்றும் சித்தரித்து மத்திய அரசின் மதவாத அரசியலை விமர்சித்துள்ளார். ஈஸ்வரி ராவ் தனது நடிப்பின் மூலம் சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளார். கிளைமேக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அருமை. எல்லாம் சிறப்பாக வந்தாலும் இது ரஜினி படமல்ல, ரஞ்சித் படம் என்று தான் கூறமுடியும்.

Leave a Response