வேல்முருகனை விடுவிக்க இத்தனை கட்சிகள் போராட்டமா..!

வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி கடலூரில் வருகிற 8–ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் உள்ள என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வீட்டில் நடைபெற்றது.

இதற்கு கட்சியின் மாநில நிர்வாகி திருமால்வளவன் தலைமை வகித்தார். காங்கிரசு கட்சி நிர்வாகி சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், ம.தி.மு.க. பிரமுகர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில், “தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற சென்ற கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டிப்பது, அவரை விடுதலை செய்யக்கோரி கடலூரில் வருகிற 8–ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், த.மு.மு.க. நிர்வாகி அமீர்பாட்ஷா, மனிதநேய ஜனநாயக கட்சி ஜாபர்அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி வெங்கடேசன், தமிழ் தேசிய பேரியக்கம் எல்லாளன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கண்ணன், ஜம்புலிங்கம்,

நாம் தமிழர் கட்சி சாமிதுரை, விடுதலை தமிழ்புலிகள் ஆதவன், எஸ்டி.பி.ஐ. ரியாஸ்கான், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மணிவேலன், விவசாய சங்க கூட்டமைப்பு, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Response