எதிர்க்கட்சிகளே இல்லாமல் அவை நடத்துவது முதல்வருக்கு அவமானம்- துரைமுருகன்..!

எதிர்க்கட்சிகளே இல்லாமல் அவையை நடத்துவது ஒரு முதல்வருக்கு அவமானகரமானது என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டுமென்கிற கோரிக்கையை முன்வைத்து திமுக பட்ஜெட் மானியக்கோரிக்கை விவாதத்தை புறக்கணித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை தொடங்கியது. இதில், திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் சட்டசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதில், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் , ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் திமுக முதன்மைச் செயலாளர் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி விவகாரத்தில் தமிழக அரசு காலம் கடந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால், அதற்கு அரசு பொறுப்பேற்க மறுக்கிறது.

எதிர்க்கட்சிகள் இல்லாமல் சபையை நடத்துவது ஒரு முதல்வருக்கு மிகவும் அவமானகரமானது. எதிர்க்கட்சிகள் வெளியேறினால் அவர்களை அழைத்து வரச் சொன்னவர் அன்றைய முதல்வர் கருணாநிதி. ஆனால், எடப்பாடி பழனிசாமி அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்.

துப்பாக்கிச்சூட்டை டிவியில் தான் பார்த்தேன் என்று ஒரு முதல்வர் சொல்வது மிகவும் கேவலமானது. எடப்பாடி பழனிசாமி இதுவரை அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சென்று பார்க்கவில்லை. துப்பாக்கிச்சூடு குறித்த விவரம் அரசின் அறிக்கையில் இல்லை . இந்த அரசின் மீதான வெறுப்பு மக்களுக்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response