சட்டசபையில் கருப்பு சட்டையுடன் களம் இறங்கும் திமுக!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும்கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர்.

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 15ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 19லிருந்து 22 வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதன்பிறகு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.

அரசின் ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதியை பெற சட்டசபையின் ஒப்புதலை பெற வேண்டும். அதற்காக துறை வாரியாக மானிய கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டசபை இன்று தொடங்கி ஜூலை 9 வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது.

காலை 10.30 மணிக்கு சபை கூடுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், குட்கா முறைகேடு ஆகிய பிரச்னைகளை சட்டசபையில் எழுப்ப திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அவை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டால் வெளிநடப்பு, போராட்டம் ஆகிய சம்பவங்கள் அரங்கேற வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டையுடன் திமுக எம்.எல்.ஏக்கள் வந்துள்ளனர்.

Leave a Response