ஒரு குப்பைக் கதை-திரைவிமர்சனம்..!

அரசனை நம்பி புருசனை கைவிட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி திசைமாறிப் போகும் என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறது ‘ஒரு குப்பைக் கதை’.

ஓசூரில் உள்ள ஒரு வீட்டு விலாசத்தை தேடிப் போகும் குமார் (தினேஷ் மாஸ்டர்), போன இடத்தில் ஒரு கொலை செய்துவிட்டதாக போலீசில் சரணடையும் காட்சியுடன் தொடங்குகிறது படம். பிளாஷ்பேக் காட்சிகளுடம் கதை விரிகிறது.

சென்னையின் கூவம் ஆற்றங்கரையோரும் உள்ள ஒரு குப்பத்தில் வசிக்கும் இளைஞர் குமார். சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளி. ஆனால் தனது வேலையை மனதார நேசிக்கும் மனிதர். சென்னையை சிங்கார சென்னையாக்கும் மனிதன் தான் என நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் அளவுக்கு வேலை மீது அளவு கடந்த பற்று வைத்திக்கிறார் குமார். ஆனால் அவரது வேலையே அவரது திருமணத்திற்கு தடையாக அமைகிறது.

வால்பாறையில் வசிக்கும் பூங்கொடியை(மனிஷா) பெண் பார்க்க போகிறார் தினேஷ். மாப்பிள்ளை சென்னையில் கிளர்க் வேலை செய்வதாக பெண் வீட்டாரிடம் தரகர் சொல்கிறார். இதை அறியும் தினேஷ், மனிஷாவின் தந்தையை தனியாக அழைத்து தான் ஒரு குப்பை அள்ளும் தொழிலாளி என்ற உண்மையை கூறுகிறார். இந்த நேர்மை பிடித்துபோக, மகளிடம் விஷயத்தை மறைத்து தினேஷுக்கு மனம் முடித்து வைக்கிறார். சென்னைக்கு வரும் மனிஷாவுக்கு குப்பை வாழ்க்கை அருவருப்பாக இருக்கிறது. இருப்பினும் தினேஷுடன் நல்லமுறையில் குடும்பம் நடத்தி கர்ப்பமாகிறார்.

அப்போது தான் அவருக்கு தெரிய வருகிறது, தினேஷ் ஒரு குப்பை அள்ளும் தொழிலாளி என்று. அதிர்ச்சி அடையும் மனிஷா, வால்பாறைக்கு கிளம்ப முடிவு செய்கிறார். ஆனால் தந்தையின் சொல்லை ஏற்று, குப்பத்திலேயே வாழ தொடங்குகிறார். மகப்பேறுக்காக தாய் வீட்டுக்கு செல்லும் மனிஷா, மீண்டும் சென்னை வர மறுக்கிறார். இதனால் குப்பத்தை விட்டு வெளியேறும் தினேஷ், அப்பார்ட்மென்ட் ஒன்றில் குடியேறி, மனைவி மற்றும் குழந்தையுடன் வாழத்தொடங்குகிறார். எதிர் பிளாட்டில் தனியாக வசிக்கும் பணக்கார இளைஞன் அர்ஜூன் (சுஜோ மேத்யூஸ்) மீது மனிஷாவுக்கு ஈர்ப்பு வருகிறது. இதை பயன்படுத்திக்கொள்ளும் அர்ஜூன், மனிஷாவையும், குழந்தையையும் அழைத்து கொண்டு ஊரைவிட்டு ஓடிவிடுகிறார். இதனால் மனமுடையும் தினேஷ், குடிகாரனாகி வாழ்வை தொலைக்கிறார். தினேஷ், தனது மனைவி மற்றும் குழந்தையை தேடி கண்டுபித்தாரா? அவர் யாரை கொலை செய்கிறார்? ஏன் செய்கிறார் என்பது மீதிக்கதை.

செய்திகளில் படித்து கடந்து போகும் ஒரு கள்ளக்காதல் விவகாரத்துக்கு பின்னால் இருக்கும் பாதிப்புகளையும், பிரச்சினைகளையும், எந்த சினிமாத்தனமும் இல்லாமல் யதார்த்தமாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்கு காளி ரெங்கசாமி. பிடிக்காத வாழ்வைவிட்டு வெளியேறி, பிடித்த வாழ்க்கை தேர்ந்தெடுக்க ஒரு பெண்ணுக்கு இருக்கும் உரிமையை நியாயப்படுத்தி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். அதே நேரத்தில் தான் தேர்ந்தெடுக்கும் ஆண் தவறானவனாக இருக்கும் பட்சத்தில் அந்த பெண்ணின் வாழ்க்கை எப்படி பாதிக்கும் என்பதையும் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், மனிதர்களின் மனம் எந்தளவுக்கு மாசுப்பட்டு போகியிருக்கிறது என்பதையும், உண்மையான அன்பும், அக்கறையும் எளிய மனிதர்களிடம் நிரம்பி கிடக்கின்றன என்பதையும் அழகியலோடு காட்சிப்படுத்தி இருக்கிறார்.

குப்பை அள்ளும் தொழிலாளியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் அறிமுக நாயகன் தினேஷ் மாஸ்டர். பெண் கிடைக்காமல் ஏங்குது, மனைவியை உயிருக்கு உயிராய் காதலிப்பது, பிடித்த வேலையை மனைவிக்காக விடுவது, அவரின் துரோக்கத்தை தாங்க முடியாமல் குடிகாரனாகி ரோட்டில் விழுந்து கிடப்பது என ஒரு யதார்த்த நாயகனாக அசத்தி இருக்கிறார். மாஸ்டர் இனி நடிப்பிலும் பிசியாகி விடுவார் என எதிர்பார்க்கலாம். ஆனால் முகத்தை ஒரே மாதிரியாக வைத்திருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் மாஸ்டர்.

யதார்த்த சினிமாவின் அச்சு அசல் நாயகி மனிஷா. வால்பாறை போன்ற இயற்கை எழில் சொஞ்சும் சூழலில் வளர்ந்த ஒரு பெண்ணின் பார்வைக்கு சென்னையின் கூவம்கரையோரத்தில் இருக்கும் குப்பம் எப்படி இருக்கும் என்பதை நச் எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார். கணவன் குப்பை தொழிலாளி என தெரிந்ததும் அவனை வெறுப்பது, ஒரு அழகான இளைஞனின் காதலை ஏற்பது, பின் அவனின் துரோகத்தை தாங்க முடியாமல் சாக நினைப்பது என பாத்திரத்தின் கனத்தை உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார்.

யோகிபாபு, ஜார்ஜ், ஆதிரா, கோவை பானு, செந்தில், லலிதா, சுஜோ மாத்யூஸ், கிரன் ஆர்யன் என அனைவருமே தங்கள் கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் சூப்பர். பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார் தீபன் சக்ரவர்த்தி. உயிருடன் இல்லை என்றாலும் நா.முத்துக்குமாரின் வரிகள், பாடலுக்கு உயிரூட்டி இருக்கின்றன.

மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு சென்னை குப்பத்தின் அழகையும், அதே நேரத்தில் வேற்று மனிதர்களின் பார்வையில் தெரியும் அருவருப்பையும் நேர்த்தியாக காட்சிபடுத்தியிருக்கிறது. வால்பாறை காட்சிகள் அழகோவியம். படம் திசைமாறாமல் பயணிக்கும் வகையில் கத்தரித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா.

படத்தின் முதல் பாதி போவதே தெரியவில்லை. ஆனால் இரண்டாம் பாதி இழுவையாக இருக்கிறது. பல காட்சிகள் எளிதாக யூகிக்க முடியும் வகையில் இருக்கிறது. இவ்வளவு நேர்மையான மனிதனுக்கு கடைசியில் அந்த தண்டனை?, தவறு செய்தவர்கள் இருவரும் சராசரி வாழ்க்கைக்கு திரும்பிவிட, மற்ற இருவருக்கு ஏன் தண்டனை என்பன போன்ற கேள்விகள் எழாமல் இல்லை.

இருப்பினும், குடும்ப உறவுகள் அர்த்தமற்றதாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், இப்படி ஒரு பதிவு அவசியம் என்பதால், ‘ஒரு குப்பைக் கதை’யை பாராட்டலாம்.

Leave a Response