இந்தியாவின் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது-நாசா எச்சரிக்கை..!

இந்தியாவின் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பூமியின் நிலத்தடி நீர்மட்டத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் கடந்த 14 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது அதன் முதல்கட்ட தகவல்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி பூமியின் ஈரப்பதம் மிகுந்த பகுதிகள் மேலும் ஈரப்பதம் மிக்கதாகவும், உலர்ந்த பகுதிகள் மேலும் உலர்ந்தும் வருவது தெரிய வந்துள்ளது. இதற்கு பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை சுழற்சி உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டாலும், மோசமான நீர் மேலாண்மையும் முக்கியக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள், கலிபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியா போன்றவற்றில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக இந்த ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இது எதிர்கால வறட்சிக்கு நல்லதல்ல என்று எச்சரித்துள்ள விஞ்ஞானிகள், நிலத்தில் இருந்து கிடைக்கும் வளங்களில் நிலத்தடி நீர்தான் மிகவும் முக்கியமான ஒன்று. குடிநீருக்கும், விவசாயத்துக்கும் அத்தியாவசியமானது. சில பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் நிலையாக உள்ளது. சில பகுதிகளில் மிகவும் குறைவாக அல்லது அதிகமாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

இந்த ஆய்வுக்காலத்தில் வட இந்தியாவில் போதுமான மழை இருந்தபோதும், அரிசி, கோதுமை போன்ற பயிர்களுக்காக நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்பட்டதாக ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Leave a Response