“செயல்” திரைவிமர்சனம்..!

வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் அளவுக்கு பலம் இருந்தும், செயல் தான் முக்கியம் என அவர்களிடம் அடிவாங்கும் ஹீரோவின் கதை.

வடசென்னையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பெரிய ரவுடி தண்டபாணி (சமக் சந்திரா). தங்கசாலை மார்கெட்டை மையமாக வைத்து தன் ‘ரவுடி தொழிலை’ செய்து வருகிறார். வடசென்னையே நடுநடுங்கி அவருக்கு மாமுல் தருகிறது. சாதாரண மிடில்கிளாஸ் பையன் கார்த்திக் (ராஜன் தேஜேஸ்வர்). தாய் லட்சுமி (ரேணுகா) சொல்லும் வேலைக்காக தங்கசாலை மார்கெட்டுக்கு செல்லும் கார்த்திக்குக்கும், ரவுடி தண்டபாணிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. தண்டபாணியை அடி அடி என அடித்து உதைத்து துவம்சம் செய்கிறார் கார்த்திக் (நிஜமாதான் சொல்றேன்). இந்த வீடியோ வாட்ஸ் அப்பில் தீயாக பரவ, தண்டபாணியின் ரவுடி தொழிலே அடியோடு அழிகிறது. வருமானம் இல்லாததால் கார் உள்பட அனைத்தும் கையைவிட்டு போகின்றன. மனைவி சாந்தியும் (வினோதினி) அவரைவிட்டு சென்றுவிடுகிறார். இதனால் மார்கெட்டை மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கார்த்திக்கை தான் அடிவாங்கிய அதே இடத்தில் வைத்து போட்டுதள்ள முடிவு செய்கிறார்.

இதற்கிடையே, தண்டபாணியை அடித்து முடித்த கையோடு வேலைக்காக கேரளா சென்றுவிடுகிறார் கார்த்திக். அங்கு தன் பள்ளி தோழி ஆர்த்தியை (தருஷி) எதேச்சையாக சந்திக்க, ஒருதலை காதல் மீண்டும் மலர்கிறது. தன்னை வெறுக்கும் ஆர்த்தியை துரத்தி துரத்தி காதலிக்க, ஒருகட்டத்தில் ஆர்த்தியும் கார்த்தி மீது காதல் கொள்கிறார். இதற்கிடையே, வில்லன் தண்டபாணி கார்த்திக்கை சென்னை வரவழைப்பதற்காக பல பிரயத்தனங்களை செய்கிறார். கார்த்திக் மீண்டும் சென்னை வந்தாரா, தாண்டபாணி அவரை அடித்து மார்கெட்டை கைப்பற்றினாரா? இல்லை கார்த்திக்கிடம் அடி வாங்கினாரா என்பது மீதிக்கதை.

அறிமுக நாயகன் ராஜன் தேஜேஸ்வர் முதல் படத்திலேயே மாஸ் ஹீரோவாக முயன்றிருக்கிறார்.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு மேலும் அழகு தேவதை இறக்குமதியாகி இருக்கிறார்.

வழக்கமான அம்மா கேரக்டரில் ரேணுகா. அவர் பாணியில் சிறப்பாக செய்திருக்கிறார். டிவி தொகுப்பாளர் தீனா ஹீரோவின் நண்பனாக வந்து காமெடி செய்கிறார்.காமெடி வேலையையும் வில்லன் சமக் சந்திராவே செய்திருக்கிறார்.

சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் கேட்கலாம். ஒரு கமர்சியல் மாஸ் மசாலா படத்துக்கு தேவையானதை செய்து கொடுத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் இளையராஜாவும், படத்தொகுப்பாளர் நிர்மலும்.

முதலில் வில்லனை துவம்சம் செய்யும் ஹீரோ, க்ளைமாக்சில் வில்லனின் மகனுக்காக அவனிடமே அடிவாங்குவது புதுமையான விஷயம்தான். என்ன காரியமானாலும் நம்முடைய செயல்தான் முக்கியம் என சொல்ல வருகிறார் இயக்குனர்.

Leave a Response