அனைத்து அதிகாரங்களுடன் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம்:உடனே அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே உள்ளது என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்த பருவத்திற்கு உள்ளாகவே அமைக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் இறுதித்தீர்ப்பில் குறிப்பிட்டபடி வரைவு செயல்திட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கடந்த 15ம் தேதி தாக்கல் செய்தார். அந்த வரைவு செயல்திட்ட அறிக்கையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 9 பேர் கொண்ட அந்தக் குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.

ஆனால், அந்த குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற அம்சத்தைத் திருத்த வேண்டும் என மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.அதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திசூட் ஆகியோர் முன் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது.

அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைப்புக்குக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் நதிநீர் பங்கீட்டில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும் என்ற அம்சம் மாற்றப்பட்டு, அணைகளை கண்காணிப்பது, நீர் பங்கீடு தொடர்பான அதிகாரத்தை பிறப்பிப்பது ஆகிய அதிகாரங்கள் ஆணையத்திடமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் டெல்லியிலும் காவிரி ஒழுங்காற்று குழுவின் அலுவலகம் பெங்களூருவிலும் அமையும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு, 4 மாநில அரசுகளும் அளித்த ஆலோசனைகள் ஆய்வு செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தது.

அதனடிப்படையில், இன்று நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்தனர். அப்போது, அணைகளை கண்காணிப்பது, நதிநீர் பங்கீடு தொடர்பான உத்தரவை பிறப்பிப்பது ஆகிய அதிகாரங்கள் ஆணையத்திடமே இருக்கும் என்ற திருத்தத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்த பருவத்திற்கு உள்ளாகவே அமைக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழர்களின் பல்லாண்டுகால கோரிக்கை நிறைவேறப்போவதை எண்ணி விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response