காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் முழுவதும் உச்சநீதிமன்றத்தின் கையில் இருக்க வேண்டும்-வேல்முருகன்..!

காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் முழுவதும் உச்சநீதிமன்றத்தின் கையில் இருக்க வேண்டும் என்றும், அதன் தலைமையகம் டெல்லியில்தான் அமைய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று நெய்வேலியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் அமைக்க வேண்டும்.

மே 14ம் தேதி சமர்பிக்கப்பட்ட திட்ட வரைவு அறிக்கையில், முக்கியத் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நாளை காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கான தீர்ப்பு வழங்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் உச்சநீதிமன்றத்திற்கு மட்டும் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும், அதன் தலைமையகம் பெங்களூருவில் அமையக்கூடாது டெல்லியில்தான் அமைய வேண்டும். இது பெங்களூருவில் அமைந்தால் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள்.

தமிழக அரசு வழக்கறிஞர்கள் நாளையும் உறுதியாக உச்சநீதிமன்றத்தில் வாதாட வேண்டும். மத்திய அரசின் எந்த வித காரணத்திற்கும் தமிழக அரசு இணங்கக்கூடாது என்றும், 19ம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்காது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Response