விவசாய கடன்கனை ரத்து செய்ய வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..!

விவசாய கடன்கனை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுக்காக்களை உள்ளடக்கிய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. அசோகன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் தங்கவேல் (உடுமலை), கென்னடி (மடத்துக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியது:-

“குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணக்கம்பாளையம் ஊராட்சியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

சிலர் தண்ணீர் உள்ள இடத்தை குத்தகைக்கு எடுத்து பாதை வரி செலுத்தி, குழாய் பதித்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்கிறார்கள். இதனால் குத்தகைக்கு எடுத்த நிலத்தை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பதில் தெரிவிக்க வேண்டும்.

பாதை வரி விதிக்கக்கோரி அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பாதை வரி விதித்தால் பல விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, பாதை வரி விதிக்க அனுமதி அளிக்கக் கூடாது.

உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவை வறட்சி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்கள் உடுமலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் 7 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். அவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக வேலை வழங்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். வங்கிகளில் கடன் உள்ளது என்று, வறட்சி நிவாரண தொகை வழங்க வங்கிகள் மறுக்கின்றன. எனவே, விவசாய கடன்கனை ரத்து செய்ய வேண்டும்.

மருள்பட்டி குளத்தில் வாய்க்கால் கரையில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகின்றன. பாதை வரி செலுத்தி தண்ணீர் கொண்டு செல்ல பதிக்கப்பட்ட குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.

இவை அனைத்துக்கும் பதில்அளித்த தாசில்தார் தங்கவேல், “கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரம் கட்டிடக்கழிவு கொட்டப்படுவது தடுக்கப்படும்.விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்த கூட்டத்தில் குமரவேல், கோபால், சண்முகராஜ் உள்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றானர்.

Leave a Response