இந்திய சினிமாத்துறைக்கே மிகச்சிறந்த முன்னுதாரணமா தமிழ் சினிமா இருக்கும்-விஷால் பெருமிதம்..!

திரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், நவரச நாயகன் கார்த்திக் இணைந்து நடிக்க ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சந்தோஷ், சதீஷ், ஜெகன், விஜி சந்திரசேகர், ‘மைம்’ கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கலந்துகொண்டு பேசினார்.

‘தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன்.

48 நாள் வேலைநிறுத்தம்ங்கிறது சாதாரண விஷயம் இல்ல. இந்த வெற்றி என்னோடது இல்ல. தயாரிப்பாளர் சங்கம் மூலமா நாம பண்ணின முயற்சிகள் வழியாக இந்திய சினிமா உலகே தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்கிற மாதிரி சாதனை செஞ்சிருக்கோம். ஒண்ணு தியேட்டர்காரங்க சம்பாதிக்கணும். இல்ல படம் எடுக்கிற தயாரிப்பாளர்கள் சம்பாதிக்கணும்.

ரெண்டு பேருக்கும் இடையில் வெளியாள் வந்து ஆட்டையைப் போட்டு சம்பாதிச்சுட்டு இருக்காங்க. அந்த விஷயம் தெரிஞ்சதுக்கு அப்புறம் சும்மா இருக்கமுடியாது. அதுக்காக போராடியே ஆகணும். எல்லோரும் சேர்ந்து போராடினோம். இப்போ படங்கள் ரிலீஸ் ஆக ஆரம்பிச்சிருக்கு. இப்போதைக்கு ஜூன் கடைசி வரைக்கும் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகும்னு பட்டியல் தயாரிச்சிருக்கோம்.

உங்க எல்லோருடைய பங்களிப்பின் மூலமாக அடுத்த ஆறு மாசத்துக்குள்ள இந்திய சினிமாத்துறைக்கே மிகச்சிறந்த முன்னுதாரணமா தமிழ் சினிமா இருக்கும்.’ என நம்பிக்கை தெரிவித்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

Leave a Response