மூன்று நாள்களாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்..!

சென்னையில், கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றுவரும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்

சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், கடந்த 2009-ம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இந்தப் போராட்டம், சுமார் 9 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தும் இதற்கு இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

தற்போது, கடந்த மூன்று நாள்களாக இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை நடத்திவருகின்றனர். முன்னதாக, டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், அவர்களைக் கைதுசெய்த காவல்துறையினர், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை தலைமைசெயலகத்தில் சந்தித்தனர். சுமார் 1 மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப் படாததால், தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்தவர்கள் மீண்டும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பெண்கள் அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாள்களாக நடைபெறும் இந்தப் போராட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடை நிலை ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஏராளமானோர் பெண் ஆசிரியர்கள். அவர்கள், தங்களின் குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மூன்று நாள்களாக உண்ணாவிரதம் இருப்பதால், நேற்று முதல் ஆசிரியர்கள் ஒவ்வொருவராக மயங்கி விழத் தொடங்கினர். நேற்று மட்டும் 29 ஆசிரியர் மயங்கி விழுந்துள்ளனர். அவர்கள், சக ஆசிரியர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ்மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இன்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய ஆசிரியர்கள் சிலர், “நாங்கள் மூன்று நாள்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறோம். எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துதரவில்லை. இங்கு, அதிகமாக பெண் ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். நாங்கள், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்கவில்லை. எங்களுடன் பணிபுரியும் சக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தையே எங்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

Leave a Response