சீற்றத்துடன் காணப்பட்ட குமரி கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது..!

கன்னியாகுமரியில் கடந்த 2 நாட்களாக சீற்றத்துடன் காணப்பட்ட கடல், இன்று இயல்பு நிலையை அடைந்தது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடல் சீற்றமாக காணப்படும் என இந்திய கடல் சார் தகவல் மையம் எச்சரித்திருந்தது. ஆனால் கன்னியாகுமரியில் மட்டுமே கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடல் சீற்றத்தால் எட்டு படகுகள் இழுத்து செல்லப்பட்டன. கடல் அலையால் ஐந்து வீடுகள் இடிந்ததுடன்,  கடல்நீர் ஊருக்குள் புகுந்தது.

கடல் சீற்றம் காரணமாக மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில், இன்று கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இருப்பினும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் தனுஷ்கோடி செல்வதற்காக விதிக்கப்பட்ட தடை மட்டும் நீடிக்கிறது. சுற்றுலாப்பயணிகள் அங்கு செல்வதை தடுக்க புதுரோடு அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

Leave a Response