ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் மீது பத்திரிக்கையாளர்கள் புகார் அளித்தால் இருவரும் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள்-அமைச்சர் ஜெயக்குமார்

பாஜகவின் ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் குறித்து பத்திரிக்கையாளர்கள் காவல் துறையில் புகார் அளித்தால் அவர்கள் இருவரும் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “ஊடகத்துறையில் பணிபுரிபவர்களுக்கு எவ்வளவு சிரமங்கள் ஏற்படும் என்பதை நான் அறிவேன். மழை, சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின்போது குடும்பத்தை மறந்து 24 மணிநேரமும் நாட்டு மக்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்பதற்காக பத்திரிக்கையாளர்கள் தியாக மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர்.

ஆனால், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கையாளர்களை குறிப்பாக, பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தும் கருத்தை எஸ்.வி.சேகர் பதிவிட்டிருக்கிறார். கடும் எதிர்ப்புகள் எழுந்தவுடன் அப்பதிவை அகற்றியிருக்கிறார். இதனை ஏற்க முடியாது. பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது. எஸ்.வி.சேகர் மீது பத்திரிக்கையாளர்கள் புகார் அளித்தால் அவர் கைது செய்யப்படுவார்.

எஸ்.வி சேகர், ஹெச். ராஜா இருவரும் சைபர் சைக்கோக்கள், விளம்பர விரும்பிகள். பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முதல்வர் குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தமிழக அரசே அவர் மீது வழக்கு தொடரும். ஹெச்.ராஜாவுக்கு கொம்பு முளைத்திருக்கிறதா? ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தால் அதனை ஏற்க காவல் துறை தயாராக இருக்கிறது.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அனைத்து விதத்திலும் அழுத்தம் கொடுத்திருக்கிறோம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். எனினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவே இறுதியானது” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Response